தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் லொன்வாபோ சொட்சோபி மீது சூதாட்டப் புகார் எழுந்துள்ளதால் அவர் விளையாட தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
2015-ம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டு ராம்ஸ்லாம் டி20 சாலஞ்ச் தொடரில் சூதாட்டப் புகாரில் லொன்வாபோ சொட்சோபி சிக்கினார், இவர் மீது தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்புப் பிரிவு கடந்த அக்டோபர் 2015-ல் நீண்ட விசாரணையை மேற்கொண்டது.
இதில் சொட்சோபி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளதையடுத்து அவர் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம், ஐசிசி, ஐசிசி உறுப்பு நாடுகள் தொடர்பான
எந்த கிரிக்கெட்டிலும் பங்கேற்க, பயிற்சியளிக்க, அல்லது எந்த ஒரு விதத்திலும் சம்பந்தப் படமுடியாத தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
33 வயதாகும் சொட்சோபி, தென் ஆப்பிரிக்க அணிக்காக 5 டெஸ்ட் போட்டிகள், 61 ஒருநாள் போட்டிகள், 23 டி20 போட்டிகள் ஆகியவற்றி பங்கேற்றுள்ளார்.
இவரது கிரிக்கெட் வாழ்க்கை ஜனவரி 2009-ல் தொடங்கியது, தென் ஆப்பிரிக்காவுக்காக கடைசியாக அவர் 2014-ம் ஆண்டு ஆடினார்.