விளையாட்டு

துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்

பிடிஐ

மெக்சிகோவின் அகாபுல்கா நகரில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பின் சார்பில் ஷாட்கன் உலகக் கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் சோரவர் சிங் சாந்து, கியான் செனாய், பைரேன்தீப் சோதி ஆகியோர் தகுதி சுற்றிலேயே வெளி யேறினர்.

சோரவர் சிங் சாந்து 125க்கு 121 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தையும், கியான் செனாய் 120 புள்ளிகளுடன் 16-வது இடத்தையும், பைரேன்தீப் சோதி 112 புள்ளிகளுடன் 53-வது இடத்தையும் பிடித்தனர். தகுதி சுற்றில் முதல் 6 இடங்களை பிடிப்பவர்கள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்பதால் இந்திய வீரர்கள் வெளியேற்றப்பட்டனர்.

சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற உலகக் கோப்பையில் வெண்கலப் பதக்கம் கைப்பற்றிய 5-ம் நிலை வீரரான ஸ்பெயினின் அல்பேர்ட்டோ பெர்ணான்டஸ் தங்கப்பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் அவர் 45க்கு 42 என்ற கணக்கில் சக நாட்டைச் சேர்ந்த அந்தோனியா பெய்லோனை வீழ்த்தினார். இங்கிலாந்தின் ஆரோன் ஹெட்டிங், வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

SCROLL FOR NEXT