விளையாட்டு

தேசிய போட்டிகளில் பங்கேற்க ரோடு சைக்கிளிங் வீராங்கனைக்கு ரூ.2 லட்சத்தில் சைக்கிள்: நல்ல உள்ளங்களின் உதவியால் நெகிழ்ந்த பெற்றோர்

கல்யாணசுந்தரம்

திருச்சியைச் சேர்ந்த ரோடு சைக்கிளிங் வீராங்கனை ஜஸ்வர்யா தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வசதியாக ரூ.2.20 லட்சம் மதிப்பில் இறக்குமதி செய்யப்பட்ட சைக்கிள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

திருச்சி, திருவானைக்கா பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன்.பால்காரரான இவரது மகள் ஐஸ்வர்யா, ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்புபடித்து வருகிறார். சிறு வயதிலிருந்தே சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டிருந்த இவரை ஒரு சைக்கிளிங் வீராங்கனையாக உருவாக்க எண்ணி, கடந்த இரு ஆண்டுகளுக்குமுன்னர் இவரது பெரியப்பா ஆறுமுகம் போட்டிகளில் பங்கேற்கும் வகையிலான பயிற்சிகளை அளிக்கத் தொடங்கினார்.

இதைத் தொடர்ந்து இவர் 2012-ம்ஆண்டில் மண்டல அளவில் நடைபெற்ற பாரதியார் தின விளையாட்டுப் போட்டியில் முதலிடம் பெற்றார். இதிலிருந்து ஊக்கம் பெற்ற இவரது போட்டி ஆர்வம் தொடர்ந்து மாவட்ட, மண்டல, மாநில பள்ளிகள் அளவிலான போட்டிகள் என கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் 11 போட்டிகளில் பங்கேற்று 8 முதலிடங்களையும், ஒரு இரண்டாமிடத்தையும், இரு மூன்றாமிடங்களையும் பெற்றுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் ராமநாதபுரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார். இருப்பினும் இந்த போட்டியில் பங்கேற்க தகுதியான சைக்கிள் இவரிடம் இல்லை.

தன்னிடம் போதிய வசதியில்லாத நிலையில், மகளின் ஆர்வத்தை வீணடிக்க விரும்பாமல் தெரிந்தவர்களை அணுகி உதவிகளை கேட்டுள்ளார் ஜெயராமன். ஸ்ரீரங்கம் பெண்கள்மேல்நிலைப்பள்ளி நிர்வாகக் குழு மற்றும் ஸ்ரீரங்கம் மாநகராட்சி கோட்டத் தலைவர் லதா ஆகியோரிடம் தனது கோரிக்

கையை முன் வைத்தார். இவர்கள் உதவும் எண்ணம் கொண்ட பலரைச் சந்தித்தனர். இதைத்தொடர்ந்து பலரது உதவியால் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட ரூ.2.20 லட்சம் மதிப்பிலான சைக்கிள் இறக்குமதி செய்யப்பட்டது.

ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில், நிர்வாகக்குழு செயலர் நந்தகுமார், பொருளாளர் கஸ்தூரி ரங்கன், உறுப்பினர் குருராகவேந்தர், டாக்டர் கே.என்.சீனிவாசன், கோட்டத் தலைவர் லதா, முன்னாள் மாணவர் சங்கத் துணைத் தலைவர் ராஜா, தலைமையாசிரியர் மீனலோசிணி ஆகியோர் ஜஸ்வர்யாவிடம் இந்த சைக்கிளை வழங்கினர்.

மிகுந்த மகிழ்ச்சியோடு இதனை பெற்றுக்கொண்ட மாணவி ஐஸ்வர்யா பின்னர், ‘தி இந்து’விடம் கூறியபோது, “நான் நினைத்துப் பார்க்கவே இல்லை. லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இந்த சைக்கிள் எனக்கு கிடைத்துள்ளது. இதை வைத்து தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று நாட்டுக்கு பெருமை தேடித் தருவேன். இந்த சைக்கிள் வாங்க உதவிய நல்ல உள்ளங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்” என்றார்.

ஜஸ்வர்யாவின் தந்தை ஜெயராமன் கூறியபோது, “ஐஸ்வர்யாவுக்கு சைக்கிள் போட்டி மீது ஆர்வம் அதிகமாக இருக்கிறது. மாநில போட்டியில் முதலிடம் பெற்ற ஜஸ்வர்யாவுக்கு கடந்த ஜூன் மாதம் ரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா ரூ.25,000 ஊக்கத்தொகை வழங்கினார். அதையும் நாங்கள் சைக்கிள் வாங்கும் நிதியில் சேர்த்து அனைவரின் உதவியோடு சைக்கிள் வாங்கியுள்ளோம். ஜஸ்வர்யா நிச்சயமாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெறுவார்” என்றார் நெகிழ்ச்சியுடன்.

உதவிய உள்ளங்கள்

சாரநாதன் பொறியியல் கல்லூரி செயலர் ரவி ரூ.50,000, டாக்டர் கே.என்.சீனிவாசன் மற்றும் ரோட்டரி சங்கம் ரூ.50,000, தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட ஊக்கத்தொகை ரூ.25,000, காங்கிரஸ் பிரமுகர் லூயிஸ் ரூ.25,000, ஆரிய வைசிய தர்ம அறக்கட்டளை- ரூ.10,000, வசந்தபவன் ஹோட்டல் நிர்வாகம் ரூ.10,000, டாக்டர் கேசவராஜ் ரூ.5,000.

SCROLL FOR NEXT