இந்தியா – நியூஸிலாந்து லெவன் அணிகளுக்கு இடையிலான இருநாள் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது.
நியூஸிலாந்து லெவன் அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் முடிவுக்கு வந்தது.
முன்னதாக விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் என்ற முந்தைய நாள் ஸ்கோருடன் நேற்று இந்தியாவின் முரளி விஜய், ஷீகர் தவண் ஆகியோர் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். அணியின் ஸ்கோர் மேலும் ஒரு ரன் கூட அதிகரிக்காத நிலையில், விஜய் 19 ரன்களில் வெளியேறினார். அடுத்து புஜாரா களமிறங்கினார். சிறிது நேரத்திலேயே தவண் 26 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதையடுத்து புஜாராவுடன் ரோஹித் சர்மா ஜோடி சேர்ந்தார். அணியின் ஸ்கோர் 93 ஆக உயர்ந்தபோது புஜாரா 33 ரன்களுடன் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ரஹானே, ரோஹித் சர்மாவுடன் இணைந்து சிறப்பாக விளையாடினார். இதனால் அணியின் ஸ்கோர் உயரத் தொடங்கியது. ரோஹித் சர்மா 83 பந்துகளிலும், ரஹானே 91 பந்துகளிலும் அரைசதம் கடந்தனர்.
59 ரன்கள் எடுத்திருந்தபோது சர்மாவும், 60 ரன்கள் எடுத்திருந்தபோது ரஹானேவும் ரிட்டையர் அவுட் முறையில் வெளியேறினர். மற்ற வீரர்கள் பேட்டிங் செய்ய வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு வெளியேறினர். பின்னர் வந்தவர்களில் சாஹா 4 ரன்களில் ஆட்டமிழந்தாலும், அஸ்வின் 51 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து அசத்தினார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 93 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்திருந்தது. ராயிடு 49 ரன்களுடனும், புவனேஸ்வர் குமார் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதனால் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது.
முன்னதாக இந்திய அணியின் புதுமுகமான ஈஸ்வர் பாண்டேவின் பந்து வீச்சு நம்பிக்கை அளிக்கும் விதமாக இருந்தது. அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஸ்வின், இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஜாகீர்கான், உமேஷ் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி, துணை கேப்டன் விராட் கோலி ஆகியோர் விளையாடவில்லை. ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்தார்.
இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் பங்கேற்ற 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 4-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. அடுத்ததாக இரு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் 6-ம் தேதி ஆக்லாந்தில் தொடங்குகிறது.