விளையாட்டு

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட்: ஜான்சன் 5வி/59; ஆஸி. அபார வெற்றி

செய்திப்பிரிவு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 281 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ஆஸ்திரேலியா.

தென் ஆப்பிரிக்காவின் செஞ்சுரியன் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 397 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்கா 206 ரன்களுக்கு சுருண்டது.

பின்னர் 2-வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 69 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்திருந்தது. ஷான் மார்ஷ் 44, கேப்டன் கிளார்க் 17 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

4-வது நாளான சனிக்கிழமை தொடர்ந்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் ஷான் மார்ஷ் முந்தைய நாள் எடுத்திருந்த ரன்களுடனேயே ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்தது.

அப்போது ஆஸி. 72.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது நாளில் கூடுதலாக 2 ரன்கள் மட்டுமே ஆஸி சேர்த்தது. அந்த இரண்டு ரன்களும் உதிரியாகக் கிடைத்தவையாகும். ஆஸ்திரேலியத் தரப்பில் டேவிட் வார்னர் சதமடித்தார்.

482 ரன்கள் இலக்கு

இதையடுத்து 482 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் 2-வது இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி, முதல் இன்னிங்ஸைப் போலவே சரிவுக்குள்ளானது. பீட்டர்சன் (1 ரன்), கிரீம் ஸ்மித் (4) ஆகியோரை வெளியேற்றி தென் ஆப்பிரிக்காவின் சரிவைத் தொடங்கி வைத்தார் ஜான்சன். பின்னர் வந்தவர்களில் அதிகபட்சமாக ஆம்லா 35 ரன்களும், டிவில்லியர்ஸ் 48 ரன்களும் எடுத்தனர்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி விக்கெட்டாக மோர்ன் மோர்கல் 1 ரன்னில் ரன் அவுட்டாக, 59.4 ஓவர்களில் 200 ரன்களுக்கு சுருண்டது தென் ஆப்பிரிக்கா. இதனால் ஆஸ்திரேலியா 281 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

மிட்செல் ஜான்சன் 5 விக்கெட்டுகளையும் பீட்டர் சிடில், ரியான் ஹாரிஸ் ஆகியர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ஆட்டநாயகன் ஜான்சன்

இரு இன்னிங்ஸ்களையும் சேர்த்து மொத்தம் 12 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி போர்ட் எலிசபெத்தில் தொடங்குகிறது.

SCROLL FOR NEXT