விளையாட்டு

ஹெச்.சி.எல் நிறுவனம் சார்பில் சென்னையில் 29-ம் தேதி ஜூனியர் டென்னிஸ் போட்டி

செய்திப்பிரிவு

ஹெச்.சி.எல் கார்ப்ரேஷன் தலைமை திட்டமிடல் அதிகாரி சுந்தர்மகாலிங்கம், மகேஷ்பூபதி டென்னிஸ் அகாடமியின் தலைமை செயல் அதிகாரி கவுரவ் நடேக்கர் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

ஹெச்.சி.எல் நிறுவனம் சார்பில் சென்னையில் ஜூனியர் டென்னிஸ் சுற்றுப்பயணப் போட்டி மற்றும் மாஸ்டர்ஸ் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய அளவிலான சுற்றுப்பயணப் போட்டி வரும் 29-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது.

சென்னை, கொல்கத்தா, லக்னோ மற்றும் புனேயில் நான்கு சாம்பியன்ஷிப் தொடர் போட்டிகள் நடைபெறும். இந்த சுற்றுப்பயண போட்டி அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் ஆதரவுடன் அந்தந்த மாநில டென்னிஸ் சங்கங்களின் ஒத்துழைப்போடு நடத்தப்படுகிறது. இந்த போட்டிக்கு மகேஷ்பூபதி டென்னிஸ் அகாடமி ஆலோசனைகள் வழங்க உள்ளது.

இந்த பயணப்போட்டி ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டி என இரண்டாக பிரிக்கப் பட்டுள்ளது. ஆடவர், மகளிர் பிரிவில் 12 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 14 வயதுக்குட்பட்டவர்கள் என இருபிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படும். இந்தப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஷிவ்நாடார் பல்கலைக்கழகத்தில் வரும் நவம்பர் 14 -ம் தேதி நடைபெறவுள்ள ஜூனியர் மாஸ்டர்ஸ் போட்டியில் விளையாட தகுதிபெறுவார்கள். சுற்றுப்பயணத்தின்போது இவர்கள் பெறும் புள்ளிகள் அடிப்படையில் அகில இந்திய டென்னிஸ் சங்கம் இவர்களை தேர்வுசெய்யும்.

12 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 14 வயதுகுட்பட்டவர்கள் நாக்அவுட் முறையில் மாஸ்டர்ஸ் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இதில் தேர்வு செய்யப்படும் நபர்கள் ஸ்பெயின் நாட்டில் உள்ள ரபேல் நடால் டென்னிஸ் அகாடமியில் ஒருவாரம் இலவசமாக பயிற்சி பெற அழைத்துச் செல்லப் படுவர்.

போட்டிகளில் 2-வது இடம் பெறுபவர்கள் கொச்சியில் உள்ள மகேஷ்பூபதி டென்னிஸ் அகாடமியில் இரண்டு வாரங்கள் பயிற்சி பெற அழைத்துச் செல்லப் படுவர். இதற்கான அனைத்து செலவுகளையும் ஹெச்.சி.எல் நிறுவனமே ஏற்றுக்கொள்கிறது.

சென்ன நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் வரும் 29-ம் தேதி முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரை சுற்றுப்பயணப் போட்டி நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 4 வரை போட்டிகள் நடத்தப்படும். இதுவரை சென்னை யில் நடைபெறும் போட்டிக்காக மட்டும் 350 பேர் வரை பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT