ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 381 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தம் 9 விக்கெட்டு களை வீழ்த்தினார். அவர் ஆட்ட நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள கேபா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டம் 4-வது நாளான ஞாயிற்றுக்கிழமையே முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் 179 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
முன்னதாக ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 295 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 136 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது.
இதையடுத்து 561 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்குடன் 2-வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து 4-வது நாளில் 179 ரன்களுக்கு சுருண்டு தோல்வியடைந்தது.
இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது டெஸ்ட் அடிலெய்டில் டிசம்பர் 5-ம் தேதி தொடங்குகிறது.
2 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் என்ற 3-வது நாள் ஸ்கோருடன் ஞாயிற்றுக்கிழமை 4-வது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து தொடர்ந்தது.
குக் 11 ரன்களுடனும், பீட்டர்சன் 3 ரன்களுடனும் ஆட்டத்தை தொடர்ந்தனர். இங்கிலாந்தின் ஸ்கோர் 72 ரன்களை எட்டியபோது 3-வது விக்கெட்டை இழந்தது. பீட்டர்சன் 26 ரன்களுடன் வெளியேறினார். அவர் ஜான்சன் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த இயன் பெல், குக்குடன் இணைந்து நிதானமாக விளையாடினார்.
எனினும் ஆட்டத்தில் பெரிய அளவில் திருப்புமுனையை ஏற்படுத்த முடியவில்லை. இயன் பெல் 32 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். அப்போது ஸ்கோர் 4 விக்கெட் இழப்புக்கு 130 ரன்களாக இருந்தது. அடுத்து குக்குடன் ரூட் ஜோடி சேர்ந்தார். திடீரென மழை பெய்ததால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. மழை விட்டதும் மீண்டும் ஆட்டம் தொடர்ந்தது.
195 பந்துகளை எதிர்கொண்டு நிதானமாக விளையாடிய குக் 65 ரன்களில் வெளியேறினார். அப்போது இங்கிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்திருந்தது.
கேப்டன் குக் வெளியேறியபின் இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் வேகமாக விழத் தொடங்கின. ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். எனவே இங்கிலாந்து அணியின் பின்வரிசை வீரர்கள் யாரும் ஒற்றை இலக்க ரன்களைத் தாண்டவில்லை.
பிரையர் 4 ரன்கள், பிராட் 4 ரன்கள், ஸ்வான் 0, டிரம்லெட் 7, ஆண்டர்சன் 2 என அடுத்தடுத்து வீழ்ந்தனர். இதனால் இங்கிலாந்து தனது 2-வது இன்னிங்ஸில் 81.1 ஓவர்களில் 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ரூட் 32 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார். ஆஸ்திரேலியா 381 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
கேபா மைதானத்தில் இங்கிலாந்து அடைந்துள்ள இரண்டாவது பெரிய தோல்வி இது. இதற்கு முன்பு 2002-ம் ஆண்டில் இதே மைதானத்தில் 384 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.
இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 103 ரன்களை விட்டுக் கொடுத்து 9 விக்கெட்டுகளை ஜான்சன் வீழ்த்தினார். மேலும் முதல் இன்னிங்ஸில் அவர் 64 ரன்கள் எடுத்திருந்தார். எனவே அவர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.