இன்னிங்ஸ் தோல்வி கண்ட மே.இ.தீவுகள் அணி சனிக்கிழமை தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் ஆண்டிகுவாவைச் சேர்ந்த 19 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் அல்ஸாரி ஜோசப்பை அணியில் சேர்த்துள்ளது.
அல்ஸாரி ஜோசப் சீனியர் மட்டத்தில் 12 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 8 முதல் தர போட்டிகளில் 24 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதில் 2 முறை 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
கடந்த பிப்ரவரியில் அண்டர் 19 உலகக்கோப்பையை மே.இ.தீவுகள் வென்றதில் அல்ஸாரி ஜோசப்பின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் 13.76 என்ற சராசரியின் கீழ் 13 விக்கெட்டுகளை கைப்பற்றினார் ஜோசப். மேலும் உலகக்கோப்பை தொடரில் 143 கிமீ வேகத்தில் ஒரு பந்தை வீசி அதிவேகப் பந்து வீச்சை பதிவு செய்தார். இந்தப் பந்து ஜிம்பாப்வே பேட்ஸ்மென் பிரெண்டன் ஸ்லையின் ஸ்டம்புகளை பதம் பார்த்ததும் குறிப்பிடத்தக்கது.
முன்னாள் மே.இ.தீவுகள் வேகப்பந்து வீச்சாளர் ஆன்டி ராபர்ட்ஸ் இவரது வேகத்தை விதந்தோதியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டுக்குள் இவரை விரைவில் கொண்டு வர வேண்டும் என்று இயன் பிஷப் கூறியுள்ளார். ஆம்புரோஸ் இவரிடம் கூறும்ப்போது, “நானும் ஆன்டிகுவாவைச் சேர்ந்தவன், நீயும் அப்படித்தான்.. எனக்கு பெருமையளிக்கிறது உனது பந்துவீச்சு” என்று கூறியுள்ளார்.
ஜோசப்பின் வேகப்பந்து பயிற்சியாளர் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வின்ஸ்டன் பெஞ்சமின் ஆவார். ஆனால் ஜோசப் தனது ஹீரோவாக டேல் ஸ்டெய்னை கருதுகிறார்.
இந்தியாவுக்கு எதிரான அடுத்த டெஸ்ட் போட்டியில் இவருக்கு வாய்ப்பளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இல்லையேல் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் மிகுவெல் கமின்ஸ் விளையாடலாம்.