விளையாட்டு

2-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது: இந்தியாவின் வெற்றியை தடுத்தார் சேஸ்

செய்திப்பிரிவு

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிக ளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. கிங்ஸ்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் 52.3 ஓவர்களில் 196 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 171.1 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 500 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

முதல் இன்னிங்ஸில் 304 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 15.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்தது. இதனால் அந்த அணி இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவும் என எதிர்பார்க்கப்பட்டது.

கடைசி நாளான நேற்று முன்தினம் பிளாக்வுட் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ராஸ்டன் சேஸுடன் இணைந்தார் விக்கெட் கீப்பர் டவ்ரிச். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி மோசமான நிலையில் இருந்து மீண்டது. டவ்ரிச் 74 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, ரோஸ்டன் சேஸ் 175 பந்துகளில் சதம் அடித்தார். இதனால் அந்த அணி இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து தப்பியது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி 104 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 388 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் டிராவில் முடித்துக்கொள்ளப்பட்டது. ராஸ்டன் சேஸ் 137, ஹோல்டர் 64 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியாவின் வெற்றியைத் தடுத்து நிறுத்திய ராஸ்டன் சேஸ் ஆட்டநாயகனாக தேர்வானார்.

SCROLL FOR NEXT