ஆஸ்திரேலிய ஓபனை வென்று தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா, இந்தப் பட்டத்துக்கு நான் தகுதியானவன்தான் என்று கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான ரஃபேல் நடாலை 6-3, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று, வாவ்ரிங்கா தன் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். இதன் மூலம் தரவரிசையில் எட்டாம் இடத்தி லிருந்து 5 இடங்கள் முன்னேறி 3-ம் இடத்தைப் பிடித்தார்.
வாவ்ரிங்கா ஆரம்பம் முதலே அசத்தலாக ஆடிய போதும், இறுதிப் போட்டியில் நடால் முதுகுவலியால் அவதிப்பட்டதுடன், கையில் காயத்துடனும் விளையாடியாதால்தான் வாவ்ரிங்காவின் வெற்றி எளிதானது என்ற கருத்து எழுந்தது. ஆனால், இதனை மறுத்துள்ள வாவ்ரிங்கா, இவ்வெற்றிக்கு தான் முழுத் தகுதியுடையவன் என்று கூறியுள்ளார்.
மேலும், டென்னிஸ் ஜாம்ப வான்கள் நடால், ஃபெடரர், நோவக் ஜோகோவிச், ஆண்டி முர்ரே ஆகியோரைத் தாண்டி அண்மைக் காலத்தில் யாரும் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றதில்லை. கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்க ஓபனில் ஜூவான் மார்டின் டெல் போட்ரோ கிராண்ட்ஸ்லாம் வென்றிருந்தார். அதற்குப் பிறகு, தரவரிசையில் முதல் நான்கு இடங்களைப் பிடித்தவர்களே கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளனர். இந்த மரபையும் வாவ்ரிங்கா தன் வெற்றியின் மூலம் உடைத்தெறிந்தார்.
இது தொடர்பாக வாவ்ரிங்கா மேலும் கூறியதாவது:
சக நாட்டவரான ரோஜர் ஃபெடரருக்குப் பிறகு, அவரைத் தொடர்ந்து கிராண்ட்ஸ்லாம் வென்றுள்ளது எனக்கு மிகவும் ஆச்சரியமளிப்பதாக உள்ளது.
இது பெரும் வியப்புக்குரிய உணர்வு. ரோஜர் ஃபெடரர் பல்வேறு கிராண்ட்ஸ்லாம்களை வென்றதைக் கடந்த காலங்களில் பார்த்திருக்கிறேன். ஆகவே, இது எனது முறை; ஒரு பட்டத்தை வென்றிருக்கிறேன்.
கடந்த 10 ஆண்டுகளில் டெல் போட்ரோவைத் தவிர, தரவரிசையில் முதல் நான்கு இடங்களில் இருந்தவர்கள் மட்டுமே கிராண்ட்ஸ்லாம் வென்றுள்ளனர்.
கடந்த இரு வாரங்களில் நான் என்ன செய்திருக்கிறேன் என்பதை நான் உணர எனக்குக் கொஞ்சம் அவகாசம் தேவை. நடால் காயமுற்றிருந்த போதும், இந்தப் பட்டத்தை வென்றதற்கு நான் தகுதியானவனாகவே கருதுகிறேன். ஏனெனில், இரண்டாம் நிலை வீரரான ஜோகோவிச்சை வீழ்த்தியிருக்கிறேன், நடாலையும் வீழ்த்தியிருக்கிறேன். கடந்த இரு வாரங்களும் வியப்பானவை. நான் விளையாடிய போட்டிகளிலேயே மிகச் சிறந்த போட்டி இது.
இதற்கு முன்பு எனக்கு நானே சொல்லிக் கொள்வேன். ஃபெடரர், நடால், ஜோகோவிச் தவிர நீ எப்போதுமே தோற்றிருக்கிறாய். ஒவ்வொரு வாரமும் கூட. எனவே, இது எளிதானதல்ல. தோல்வியிலிருந்து சாதகமான அம்சத்தைத் தெரிவு செய்வது கடினமானது. எனவே, என் விளையாட்டுக் காலங்களில் எப்போதும் மைதானத்துக்குச் செல்வேன். பயிற்சி செய்வேன். என்னை மேம்படுத்திக் கொள்ள முயற்சி செய்வேன். உலகின் மிகச்சிறந்த வீரரைத் தோற்கடிக்க என்னைத் தயார்படுத்திக் கொள்வேன், என்றார் வாவ்ரிங்கா.
வாவ்ரிங்கா தன் இடது கையில் சாமுவேல் பெக்கட்டின் மேற் கோளைப் பச்சை குத்தியிருப்பார். அந்த வாசகம், “எப்போதும் முயற்சி செய், தோல்வியடை. அது ஒரு பிரச்சினையே இல்லை. மீண்டும் முயற்சி செய், மீண்டும் தோல்வியுறு. இன்னும் மிகச்சிறப்பாக.”