சென்னையில் நடக்கும் அகில இந்திய மக்கள் பணியாளர் டென்னிஸ் போட்டிகளில் ஐ.ஏ.எஸ் மற்று இதர அரசு அதிகாரிகள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வளாகத்தில் எங்கு பார்த்தாலும் அரசு அதிகாரிகளாக தென்படுகின்றனர்.ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் ஆரம்பித்து எழுத்தர் வரை ஏகப்பட்ட மக்கள் பணியாளர்கள் அங்கு டென்னிஸ் பேட்டுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். தொழில்முறை வீரர்களைப் போன்ற இவர்களின் டென்னிஸ் விளையாட்டு பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளது.
ஜனவரி 18 முதல் 23-ம் தேதி வரை இந்த போட்டி நடைபெறவுள்ளது. பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான அதிகாரிகள் உற்சாகமாக விளையாடி வருகின்றனர்.
தொடக்க நாளான 18-ம் தேதி தமிழக விளையாட்டுத் துறை முதன்மைச் செயலாளரான நசிமுதீன் ஐ.ஏ.எஸ்., ஆந்திராவைச் சேர்ந்த வெங்கட்சன ரெட்டி என்னும் ஐ.ஏ.எஸ். அதிகாரியை 6-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
இந்த டென்னிஸ் போட்டியில் பங்கேற்க வந்திருக்கும் ஹரியாணா மாநில துணை ஆட்சியரான ஆதித்யா தாயியா கூறுகையில், “அரசு அதிகாரிகளுக்கிடையே நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டி வரவேற்கத்தக்கதாகும். வழக்கமான அலுவலக வேலைக்கு நடுவே இது போன்ற போட்டிகளில் பங்கேற்பது மனதுக்கும் உடலுக்கும் உற்சாகம் அளிக்கிறது. நாடு முழுவதும் பல்வேறு அரசு அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கிறது. இது மாதிரியான போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்” என்றார்.
மற்றொரு போட்டியாளரான குஜராத் மாநில நிதித்துறை இணைச் செயலாளர் சாய்லர் கூறுகையில், ``அலுவலக நாட்களில் மாலை நேரங்களில் சக அதிகாரிகளுடன் டென்னிஸ் விளையாடியிருக்கிறேன். மாநிலத்தை விட்டு வெளியே வந்து மற்ற அரசு அதிகாரிகளுடன் டென்னிஸ் விளையாடுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.