விளையாட்டு

தொடக்கத்தில் களமிறங்குவதையே விரும்புகிறேன்: ரோகித் சர்மா

செய்திப்பிரிவு

ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரராகக் களமிறங்குவதையே தான் விரும்புவதாக ரோகித் சர்மா கூறியுள்ளார்.

டெய்லி நியூஸ் இணையதளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இது குறித்து கூறும் போது, “கடந்த சில காலமாக தொடக்கத்தில் களமிறங்குவது எனக்கு பொருத்தமாக இருந்து வந்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டிலிருந்து நான் தொடக்கத்தில் களமிறங்கினேன். தொடக்க வீர்ர் என்ற ரோல் எனக்கு பிடித்தமானதாக இருக்கிறது.

கடந்த 18 மாதங்களாக நான் என்ன செய்தேன் என்பது பற்றி நான் கூற விரும்பவில்லை. ஆனால் புள்ளிவிவரங்களைப் பார்த்தால் ஓரளவுக்கு நான் சிறப்பாகவே ஆடியுள்ளதாக நினைக்கிறேன்.

தொடக்க வீரராக செயல்படுவது சவாலானது, குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் இரு முனைகளிலும் புதிய பந்தை எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல. இதனால் தொடக்கத்தில் அதிக கவனம் செலுத்த முடிகிறது.

இவ்வாறு கூடுதல் கவனத்துடன் விளையாடுவது எனது பேட்டிங் திறமைகளைக் கூட்டியுள்ளது என்றே நான் கருதுகிறேன். அதற்காக, நடுவில் களமிறங்குவதில் சவால்கள் இல்லை, கவனம் தேவையில்லை என்று நான் கூறவில்லை. மாறாக தொடக்கம் என்னை மேம்படுத்தியுள்ளது என்று கூறுகிறேன்.

ஆனாலும் தொடக்க வீரர் இடத்திற்கு இப்போது ஏற்பட்டுள்ள போட்டி அணிக்கு நல்லதே.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்குள் உடல் நலம் தேறி விடுவேன் என்று நினைக்கிறேன்” என்றார்.

தொடக்க வீரராக ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா 39 இன்னிங்ஸ்களில் 43.20 என்று சராசரி வைத்துள்ளார். மற்ற இடங்களில் களமிறங்கியதில் 79 இன்னிங்ஸ்களில் 31.72 என்ற சராசரியையே வைத்துள்ளார். ஆகவே அவர் கூறுவது போல் தொடக்க வீரர் என்ற நிலை அவரது பேட்டிங்கை மேம்படுத்தியுள்ளது என்று கூறலாம்.

SCROLL FOR NEXT