பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் மீண்டும் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் கூறுகையில், “புதிய பயிற்சியாளரை பரிந்துரை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள கமிட்டி, வக்கார் யூனிஸை தொடர்பு கொண்டு பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுள்ளது.
ஏற்கெனவே பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருந்துள்ள வக்கார் யூனிஸ், தனது குடும்பம் ஆஸ்திரேலியாவில் குடியேறியதைத் தொடர்ந்து அவர்களுடன் போதிய நேரத்தை செலவிட முடியவில்லை என்றுகூறி 2011-ல் பதவியைத் துறந்தார். இப்போது தனது குடும்பத்தினருடன் துபையில் குடியேற திட்டமிட்டுள் ளதாக வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார். அதனால் அவர் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடவும், அணிக்கு பயிற்சியளிக்கவும் வசதியாக இருக்கும்.
புதிய பயிற்சியாளராக வருவதற்கு அவருக்கே அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் இப்போதைய அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் அவருடைய பயிற்சியின் கீழ் விளையாடியவர்கள். அனைத்து வீரர்களும் வக்கார் யூனிஸ் மீது மிகப்பெரிய மதிப்பு வைத்திருக்கிறார்கள்” என தெரிவித்தன.