தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 66-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் தமிழக செஸ் சங்கத்தின் சார்பில் வரும் 23-ம் தேதி மின்னல் வேக செஸ் போட்டி நடத்தப்படுகிறது.
சென்னையில் உள்ள பல்நோக்கு உள் விளையாட்டரங்கில் காலை 11 மணி முதல் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதற்கான மொத்தப் பரிசுத் தொகை ரூ.2 லட்சத்து 2 ஆயிரம் ஆகும். இந்தத் தொகையை அகில இந்திய செஸ் சம்மேளன தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் எம்.எல்.ஏ. வழங்கியுள்ளார்.
போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு ரூ.66 ஆயிரம் ரொக்கப் பரிசாக வழங்கப்படும். இதுதவிர போட்டியில் பங்கேற்பவர்களுக்கு 66 பரிசுகள் வழங்கப்படவுள்ளன. போட்டியில் பங்கேற்பதற்கான நுழைவுக்கட்டணம் ரூ.100 ஆகும். கிராண்ட் மாஸ்டர்கள், இண்டர்நேஷனல் மாஸ்டர்கள், மகளிர் கிராண்ட் மாஸ்டர்கள், மகளிர் இண்டர்நேஷனல் மாஸ்டர்களுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது. முன்பதிவு செய்வதற்கான கடைசி நாள் 21-ம் தேதி ஆகும்.
முன்பதிவு செய்வதற்கு சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் உள்ள தமிழ்நாடு செஸ் சங்க அலுவலகத்தை நேரடியாகவோ, தொலைபேசி மற்றும் இ-மெயில் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்கள்: 044-25384477, 25366464. இ-மெயில் முகவரி: tnchesstmt@gmail.com.மேற்கண்ட தகவல் தமிழ்நாடு செஸ் சங்க பொதுச் செயலர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.