விளையாட்டு

சதமடிக்க ஒரு ரன்னுக்கு ஒரு மணி நேரம் மேலாக காத்திருந்த அஸ்வின்

செய்திப்பிரிவு

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாளான நேற்று அஸ்வினின் சதம் ஆட்டத்தில் சுவாரசியத்தைக் கூட்டினாலும் அந்த சத்தத்தை எட்ட அவர் ஒரு மணி நேரம் மேல் காத்திருக்க வேண்டியிருந்தது.

111-வது ஓவரில் இந்தியா 288 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் இழந்திருந்த போது, அஸ்வின் அந்த ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி 250 பந்துகளில் 99 ரன்களை எட்டினார். பிறகு அந்த ஓவரில் ரன் ஏதும் எடுக்காததால், அடுத்த ஓவரை சாஹா சந்தித்தார். அந்த ஓவரில் சாஹா 1 ரன் எடுத்து அஸ்வின் ஆட வந்தாலும், மீதமிருந்த 2 பந்துகளில் அஸ்வின் ரன் எடுக்கவில்லை. 256 பந்துகளில் 99 ரன்கள்.

மீண்டும் அடுத்த ஓவரின் கடைசி பந்தை அஸ்வின் சந்தித்தாலும் அதிலும் ரன் எடுக்க முடியாமல் போனது. 257 பந்துகளில் 99 ரன்கள்

தொடர்ந்து, 114, 115 என அடுத்த 2 ஓவர்களையும் சாஹாவே சந்திக்க உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது. சாஹா 93 ரன்களுடன், அஸ்வின் அதே 99 ரன்களுடனும் (257 பந்துகள்) உணவு இடைவேளைக்குச் சென்றனர்.

அடுத்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்தே ஆட்டம் தொடர்ந்தது. உணவு இடைவேளைக்குப் பின் முதல் ஓவரை அஸ்வின் ஆடவிருப்பதால் அவர் சதம் எட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த ஓவரில் அஸ்வின் ரன் எடுக்காமல் ஏமாற்றம் தந்தார். அடுத்த ஓவரின் 2-வது பந்தில் சாஹா 1 ரன் எடுத்தார். சுழற்பந்துவீச்சாளர் சேஸ் வீசிய 3 பந்தை மடக்கி ஆடிய அஸ்வின், யாரும் எதிர்பாராவிதமாக அடுத்த பந்தை சிக்ஸருக்கு விரட்டி சதத்தை எட்டினார்.

இப்படி, 99 ரன்களிலிருந்து சதத்தை எட்ட 1 மணி நேரம் மேல் அஸ்வினும், இந்திய ரசிகர்களும் காத்திருக்க வேண்டியதாயிருந்தது. இந்தத் தொடரில் அஸ்வின் எடுக்கும் 2-வது சதம் இது. மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக அவர் எடுக்கும் 4-வது சதம் இது.

முடிவில் 118 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சாஹாவும் சதத்தைக் கடந்து 104 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

SCROLL FOR NEXT