டி20 உலகக் கோப்பையை தக்கவைப்பது மிகவும் சவாலானது. ஆனாலும் அதை தக்கவைப்பதற்கு கடுமையாகப் போராடும் வகையில் நாங்கள் தயாராகியிருக்கிறோம் என மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் டேரன் சமி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற கடந்த டி20 உலகக் கோப்பையில் டேரன் சமி தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணி இலங்கையைத் தோற்கடித்து சாம்பியன் ஆனது. இந்த நிலையில் அடுத்த உலகக் கோப்பை போட்டி வரும் 16-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை வங்கதேசத்தில் நடைபெறவுள்ளது. அது தொடர்பாக டேரன் சமி கூறியிருப்பதாவது:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனாக பங்கேற்பது அற்புதமான உணர்வாகும். எனினும் அது முடிந்துபோன கதை. வங்கதேசத்திற்கு சென்ற பிறகு கடந்த உலகக் கோப்பையை பற்றிய நினைவுகளை மறந்துவிட்டு, புதிய எண்ணத்துடன் விளையாடத் தொடங்குவோம்.
கடந்த உலகக் கோப்பை போட்டியில் எப்படி விளையாடினோமோ அதேபோன்று விளையாடுவோம். ஓர் அணியாக இணைந்து விளையாடுவோம். மீண்டும் கோப்பையை வெல்வதே எங்களின் இலக்கு. இந்த முறை கோப்பையை தக்கவைக்க முடியும் என்பதில் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறோம். எங்கள் வீரர்கள் அதற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.
எங்கள் அணியின் அனுபவமிக்க வீரர்களில் ஒருவரான கிரண் போலார்ட் காயம் காரணமாக இடம்பெறவில்லை. அதனால் அவரின் பங்களிப்பை இழக்கிறோம். எனினும் தற்போதைய அணியில் உள்ள வீரர்கள் உலகம் முழுவதிலும் விளையாடிய அனுபவம் பெற்றவர்கள். இவர்களில் 12 பேர் ஐபிஎல் போட்டியில் விளையாடியவர்கள். ஐபிஎல் போட்டி எனக்கும் நல்ல அனுபவத்தைத் தந்திருக்கிறது.
கெயில், பிராவோ, சுநீல் நரேன் ஆகியோர் ஐபிஎல் போட்டிகளில் கலக்கியவர்கள். அவர்கள் அனைவரும் இடம்பெற்றுள்ள அணிக்கு நான் கேப்டனாக இருப்பது மிகப்பெரிய அதிர்ஷ்டம். நடப்பு சாம்பியனாக களமிறங்கி, கோப்பையை தக்கவைப்பது கடினம்தான். ஆனால் அதை செய்வதற்கான தகுதி எங்கள் அணியிடம் இருப்பதாக நினைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.