விளையாட்டு

ரஹானே அரைசதம் அவுட்: 5 விக்கெட்டுகளை இழந்து இந்தியா சரிவு

செய்திப்பிரிவு

இந்தூரில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வரும் 2-வது ஓருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று பேட் செய்து வரும் இந்திய அணி 25 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்துள்ளது.

ரஹானே தனக்குக் கொடுத்த 3-ம் நிலை பணியை சிறப்பாகச் செய்து வருகிறார். ரஹானே 62 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து இம்ரான் தாஹிர் பந்தில் பவுல்டு ஆகி வெளியேறினார். ரெய்னா, ரன் எடுக்காமல் மோர்னி மோர்கெல் வீசிய லெக் ஸ்டம்ப் ஷார்ட் பிட்ச் பந்தை தொட்டார், விக்கெட் கீப்பர் கேட்ச் பிடித்தார். தோனி 11 ரன்களுடனும், அக்சர் படேல் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

கடுமையான வெயிலில் தென் ஆப்பிரிக்கா பந்து வீசி வருகிறது.

ரோஹித் சர்மா முதல் ஓவரை வீசிய ஸ்டெய்னின் கடைசி பந்தில் ரன் அவுட் ஆகிவிடுமாறு 1 ரன் எடுக்க, அடுத்த ரபாதா ஓவரைச் சந்திக்க வேண்டியிருந்தது. இந்த ஓவரின் 4-வது பந்தில் ஆஃப் ஸ்டம்ப் பறந்தது. 3 ரன்களில் ரோஹித் சர்மா அவுட். ஃபுல் லெந்த் பந்து, நல்ல வேகம், பிளிக் ஆட முயன்றதில் சற்றே தாமதம், பந்து பேடில் பட்டு ஆஃப் ஸ்டம்ப் சில அடிகள் தள்ளி போய் விழுந்தது.

அடுத்ததாக ஷிகர் தவண் ரபாதாவை ஒரு அருமையான கவர் டிரைவ் ஆடி பவுண்டரி அடித்தார். ஆனால் அதே ஓவரில் ஒரு எல்.பி. முறையீடு எழுந்தது. பலத்த முறையீடு அது தப்பினார் தவண்.

ரஹானே, ஸ்டெய்னின் ஓரே ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசினார். 2 கவர் டிரைவ்களை தூக்கி அடிக்க, ஒரு பந்து மிட்விக்கெட்டில் பவுண்டரிக்குப் பறந்தது. மீண்டும் மோர்கெலை கவர் திசையில் தூக்கி அடித்து ஒரு பவுண்டரி அடிக்க, தவண் மிக அருமையாக மிட் ஆஃபில் ஒரு பவுண்டரி மோர்கெலை அடித்தார். கடைசியில் 34 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்த தவண், கவன இழப்பினாலும், மோர்கெல்லின் அருமையான ஏமாற்று ஸ்லோ பந்தினாலும் ஷார்ட் கவரில் கேட்ச் கொடுக்க நேரிட்டது.

தனது பார்மை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆடிய விராட் கோலி 18 பந்துகளில் பவுண்டரி இல்லாமல் 12 ரன்கள் எடுத்த நிலையில் மோசமான புரிதலினால் ரன் அவுட் ஆனார்.

ரஹானே மிட் ஆஃபில் அடித்த ஷாட் கேட்சாகச் செல்ல அதனை பெஹார்டீன் நழுவ விட்டார். கடினமான வாய்ப்பு நழுவ விட்டார். இதனைப் பயன்படுத்தி ஒரு ரன் எடுத்தனர். ஆனால் விராட் கோலி 2-வது ரன்னுக்காக ஓடி வந்தார், ரஹானே வேண்டாம் என்றார். இருவரும் ஒரு முனையில் நிற்க, பேட்டிங் முனையில் விக்கெட் கீப்பர் பைல்களை அகற்றினார், கோலி ரன் அவுட்.

ரஹானே அருமையான 6 பவுண்டரிகளுடன் தன்னம்பிக்கையுடன் ஆடி வந்த நிலையில் இம்ரான் தாஹீர் பந்து ஒன்று லெக் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆக ஸ்வீப் ஆட முயன்றார் பந்து சிக்கவில்லை, பந்து ஸ்டம்ப்களை தொந்தரவு செய்தது. அருமையான பந்து ரஹானே பவுல்டு ஆனார். ஆனால் சிறிது நேரம் ரஹானேயால் நம்ப முடியவில்லை.

கடைசியாக ரெய்னாவை ஷார்ட் பிட்ச் பந்துகளாக வீசி மோர்கெல் தொந்தரவு செய்தார், ரெய்னாவும் அதிகமாக நகர்ந்து நகர்ந்து ஆடினார். ஒரு பந்து ஸ்டம்புக்கு அருகில் சென்றது. இந்நிலையில் மீண்டும் ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை லெக் ஸ்டம்பில் வீச ரெய்னா அதனை ஆட முயல எட்ஜ் எடுத்து கீப்பரிடம் கேட்ச் ஆனது, ரெய்னா 5 பந்துகள் ரன் எதுவும் இல்லை. அவுட்.

12-வது ஓவரின் முதல் பந்தில் அடித்த பவுண்டரிக்குப் பிறகு 22-வது ஓவரின் 4-வது பந்திலேயே அடுத்த பவுண்டரி வந்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் மோர்கெல் 2 விக்கெட்டுகளையும் ரபாதா, இம்ரான் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

SCROLL FOR NEXT