ஆஸ்திரேலியாவை டெஸ்ட் தொடரில் 2-1 என்று வீழ்த்தி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்திய அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன் அணியாகத் திகழ்கிறது. இதற்கான 1 மில்லியன் டாலர்களுக்கான காசோலை கேப்டன் விராட் கோலியிடம் கவஸகரால் அளிக்கப்பட்டது.
மேலும் நம்பர் 1-ஐ அடையாளப்படுத்தும் தண்டாயுதத்தையும் சுனில் கவாஸ்கர் விராட் கோலிக்கு அளித்தார்.
இந்தத் தொடரில் இந்திய அணி ஒரே ஒரு வெற்றி பெற்றாலே நம்பர் 1 இடத்தைத் தக்கவைக்கும் என்ற நிலை இருந்தது, ஆஸ்திரேலியா இந்திய அணியை 3-0 என்று வீழ்த்தியிருந்தால் இந்திய அணி நம்பர் 1 இடத்திலிருந்து இறங்கியிருக்கும், ஆனால் தொடரை இந்தியா 2-1 என்று வென்றது.
2016 அக்டோபரி நியூஸிலாந்தை இந்தூர் டெஸ்ட் போட்டியில் வீழ்த்திய பிறகு இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்தது.
தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து மோதும் ஹேமில்டன் டெஸ்ட் முடிந்தவுடன் 2வது 3-வது இடங்கள் தீர்மானிக்கப்படவுள்ளது. தென் ஆப்பிரிக்கா டிரா செய்தால் 2-ம் இடம் உறுதியாகும். தோற்றால் ஆஸ்திரேலியா 2-ம் இடத்தில் முடியும்.
2-ம் இடத்தில் முடியும் அணிக்கு 5 லட்சம் டாலர்கள் தொகை பரிசாகக் கிடைக்கும் 3-ம் இடம் பிடிக்கும் அணிக்கு 2 லட்சம் டாலர்கள் பரிசு கிடைக்கும். 4-ம் இடத்தில் உள்ள இங்கிலாந்துக்கு 1 லட்சம் டாலர்கள் கிடைக்கும்.
பரிசைப் பெற்ற கோலி கூறும்போது, “ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடம் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் அணி வீரர்களின் உறுதிக்கு சவால் விடுவதாகும். இந்நிலையில் நாங்கள் உறுதியான அணி என்பதை நிரூபித்தது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி” என்றார் விராட் கோலி.
சுனில் கவாஸ்கரும் இந்திய அணியின் திறமையான வீரர்களுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.