6 நிமிடங்கள் நின்று போன இருதயம் மீண்டும் மருத்துவர்கள் முயற்சியால் உயிர் பெற வைக்கப்பட்டாலும் அவர் உயிர் சில மணி நேரங்களில் பிரிந்தது.
பாகிஸ்தான் கிரிக்கெட் ‘லெஜண்ட்’ ஹனீப் முகமது இறந்து விட்டார் என்று மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டது,
கராச்சியில் உள்ள அகாகான் மருத்துவமனையில் இறந்து விட்டார் என்று மருத்துவர்களால் அறிவிக்கப்பட்ட பிறகு 6 நிமிடங்கள் கழித்து மருத்துவ முயற்சியினால் மீண்டும் இருதயம் செயல்பட வைக்கப்பட்டது.
2013-ல் ஹனீப் முகமதுவுக்கு நுரையீரல் புற்று நோய் என்று கணிக்கப்பட்டது. அதற்கு லண்டனில் சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில் 6 நிமிடங்கள் ஓடாமல் இருந்த இருதயம் அதன் பிறகு ஓடத் தொடங்கியது. ஆனால் இது நீடிக்கவில்லை. இருதய ஓட்டத்தைத் தக்க வைக்க முடியவில்லை, ஹனீப் முகமது காலமானார் என்று தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஜூலை 30-ம் தேதியிலிருந்து வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டு உயிருக்காக போராடி வந்தார், இவருக்கு ஏகப்பட்ட பிரச்சினைகளுடன் நுரையீரல் பிரச்சினையும் இருந்து வந்தது.
லிட்டில் மாஸ்டர் என்று பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அழைக்கப்படும் ஹனீப் மொகமதுவின் திறமைக்கு சமமான பேட்ஸ்மென்கள் இன்று வரை கூட அந்த அணியில் இல்லை என்று கருதப்படும் ஒரு வீரர் ஆவார். இவர் மே.இ.தீவுகளுக்கு எதிராக 1957/58-ல் எடுத்த 337 ரன்கள் மிகப்பெரிய டெஸ்ட் இன்னிங்ஸ் என்று கருதப்படுவதாகும். டெஸ்ட் வரலாற்றில் மீக நீண்ட இன்னிங்ஸ் இதுவாகவே இருந்து வருகிறது.
மொத்தம் 55 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய இவர் 3,915 ரன்களை 43.98 என்ற சராசரியில் எடுத்தார். இதில் 12 சதங்கள் அடங்கும். முதல் தர கிரிக்கெட்டில் 238 போட்டிகளில் 17,059 ரன்கள் எடுத்தார். சராசரி 52.32.
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள ஜுனாகத்தில் 1934-ம் ஆண்டு பிறந்தவர் ஹனீப் முகமது, பிறகு பிரிவினைக்குப் பிறகு இவரும் இவரது 4 சகோதரர்களும் பாகிஸ்தான் சென்றனர். ஹனீப் மொகமதுவின் மகன் ஷோயப் மொகமது 45 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார்.