விளையாட்டு

இலங்கை பந்து வீச்சை வெளுத்துக் கட்டிய ஸ்காட்லாந்து அபார வெற்றி

இரா.முத்துக்குமார்

கென்ட் கண்ட்ரி கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிறன்று நடைபெற்ற பயிற்சி ஒருநாள் ஆட்டத்தில் இலங்கையை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியுறச் செய்தது ஸ்காட்லாந்து.

ஆஞ்சேலோ மேத்யூஸ் தலைமை இலங்கை அணி முதலில் பேட் செய்து 49.5 ஓவர்களில் 287 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஸ்காட்லாந்து தரப்பில் இவான்ஸ், விட்டிங்கம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

தொடர்ந்து ஆடிய ஸ்காட்லாந்து அணி 42.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 291 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. ஸ்காட்லாந்து அணியில் கிராஸ் என்ற தொடக்க வீரரும், கொயெட்சர் என்ற தொடக்க வீரரும் சதம் கண்டனர், கிராஸ் 123 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 106 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். கொயெட்சர் 84 பந்துகளில் 15 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 118 ரன்கள் எடுத்தார்.

இந்த ஆட்டத்திற்கு முதல்தர அந்தஸ்து இல்லையென்றாலும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டுக்கு முன்னதாக இப்படியொரு தோல்வியை இலங்கை சந்தித்துள்ளது அந்த அணியினரிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொயட்சரும், கிராஸும் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 201 ரன்களைச் சேர்த்தனர்.

இலங்கை அணி முதலில் பேட் செய்த போது தரங்கா, மெண்டிஸ் ஆகியோரை இழந்து 38/2 என்று ஆனது, பிறகு சந்திமால் (79) பெரேரா (58) இணைந்து 77 ரன்களை 3வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். பெரேரா 8 பவுண்டரிகளுடன் 57 ரன்களில் வெளியேறினார். கேப்டன் மேத்யூஸ் 15 ரன்களில் நடையைக் கட்ட 165/4 என்று ஆனது இலங்கை. சந்திமால் 79 ரன்களில் ஆட்டமிழந்த போது ஸ்கோர் 192/5.

பிறகு அசங்கா குணரத்னே, கபுகேதரா இணைந்து ஸ்கோரை 192/5 என்ற நிலையிலிருந்து 274 வரை கொண்டு சென்றனர். அதிரடி முறையில் ஆடிய கபுகேதரா 50 பந்துகளில் 6 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 71 ரன்கள் விளாசினார். குணரத்னே 32 பந்துகளைச் சந்தித்து பவுண்டரியே கைகூடாமல் 27 ரன்கள் எடுத்தார். அதன் பிறகு 13 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த இலங்கை 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தொடர்ந்து ஆடிய ஸ்காட்லாந்து தொடக்க வீரர்கள், லக்மல், பிரதீப், மேத்யூஸ், பெரேரா, சண்டகன், குணரத்னே ஆகியோர் அடங்கிய ஓரளவுக்கு நல்ல பந்து வீச்சு வரிசையை பதம் பார்த்தனர். ஸ்காட்லாந்து மிகவும் சவுகரியமாக 43-வது ஓவரில் வெற்றியை ஈட்டியது.

மீண்டும் நாளை இரு அணிகளும் பயிற்சி ஆட்டத்தில் மோதுகின்றன.

SCROLL FOR NEXT