இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 104.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்ததைத் தொடர்ந்து 3-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.
இந்த டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெறும் தென் ஆப்பிரிக்காவின் மூத்த ஆல்ரவுண்டரான ஜாக் காலிஸ், மிகவும் நிதானமாக ஆடி அந்த அணியைச் சரிவிலிருந்து மீட்டார். அவர் 224 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் குவித்து களத்தில் இருக்கிறார். அவர் தனது 45-வது சதத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்.
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 111.3 ஓவர்களில் 334 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதையடுத்து பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 20 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 82 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் கிரீம் ஸ்மித் 35, ஆல்விரோ பீட்டர்சன் 46 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
ஜடேஜா ஆதிக்கம்
3-வது நாளான சனிக்கிழமை தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 103 ரன்களை எட்டியபோது ஸ்மித்-பீட்டர்சன் ஜோடியை ரவீந்திர ஜடேஜா பிரித்தார். கிரீம் ஸ்மித் 81 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஆம்லா 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் சமி பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். டெஸ்ட் போட்டியில் 7-வது அரைசதம் கண்ட ஆல்விரோ பீட்டர்சன் 100 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் தென் ஆப்பிரிக்கா 113 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.
காலிஸ்-டிவில்லியர்ஸ் அபாரம்
இதையடுத்து காலிஸுடன் இணைந்தார் டிவில்லியர்ஸ். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி தென் ஆப்பிரிக்காவைச் சரிவிலிருந்து மீட்டது. கடைசிப் போட்டியில் விளையாடும் காலிஸ் மிகவும் கவனமாக விளையாடினார்.
அவர் முதல் பவுண்டரியை அடிப்பதற்கு 25 பந்துகளை எடுத்துக் கொண்டார். 40 ஓவர்களுக்கு மேல் ஆடிய டிவில்லியர்ஸ்-காலிஸ் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 127 ரன்கள் குவித்தது. 117 பந்துகளைச் சந்தித்த டிவில்லியர்ஸ் 9 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து காலிஸுடன் இணைந்தார் ஜே.பி.டுமினி. அவரும் ஆமை வேகத்தில் ஆடி இந்திய பௌலர்களை வெறுப்பேற்றினார். இந்த ஜோடியும் ஏறக்குறைய 30 ஓவர்கள் ஆடியது. இன்னிங்ஸின் 104-வது ஓவரை வீசிய ஜடேஜா, டுமினியை எல்பிடபிள்யூ முறையில் வெளியேற்றினார். 82 பந்துகளைச் சந்தித்த டுமினி 4 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
மழையால் நிறுத்தம்
இதையடுத்து “நைட் வாட்ச்மேனாக” ஸ்டெயின் களம்புகுந்தார். தென் ஆப்பிரிக்கா 104.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்ததால் 3-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. காலிஸ் 78 ரன்களுடனும், ஸ்டெயின் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.
இந்தியத் தரப்பில் ரவீந்திர ஜடேஜா 37 ஓவர்களில் 87 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். -பிடிஐ