அபுதாபியில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் 2-ஆம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் தன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 570 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
நேற்று தொடர்ச்சியாக 3-வது சதமெடுத்து சாதனை புரிந்த யூனிஸ் கான் இன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 5-வது இரட்டைச் சதத்தை எடுத்து 213 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கேப்டன் மிஸ்பா உல் ஹக் 101 ரன்கள் எடுத்தார். இருவரும் இணைந்து 4-வது விக்கெட்டுக்காக 181 ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலியாவை வெறுப்பேற்றினர்.
யூனிஸ் கான் 349 பந்துகளில் 15 பவுண்டரி 2 சிக்சருடன் 213 ரன்கள் எடுத்து பீட்டர் சிடில் பந்தில் பவுல்டு ஆனார். மிஸ்பா உல் ஹக் 10 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 168 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து ஸ்மித் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
நேதன் லயன் 37 ஓவர்கள் வீசி 154 ரன்களுக்கு 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் ஒருவரும் நல்ல வேளையாக ‘சதம்’ எடுக்கவில்லை.
இன்று காலை அசார் அலி 109 ரன்களில் ஹேடினுக்கு பதிலாக கீப் செய்த வார்னரிடம் கேட்ச் கொடுத்து ஸ்டார்க் பந்தில் வெளியேறினார். மிட்செல் ஜான்சன் தனது முழு வேகத்தையுன் தோள்பட்டைப் பலத்தையும் காட்டி யூனிஸ் கானை கொஞ்சம் பிரச்சினைக்குள்ளாக்கினார். அப்போது யூனிஸ் கான் கொடுத்த கேட்சை வார்னர் கல்லியில் கோட்டை விட்டார்.
பீட்டர் சிடில் பந்தை எட்ஜ் செய்த யூனிஸ் கான் கேட்சைப் பிடிக்கச் சென்ற பிராட் ஹேடின் காயம் அடைந்தார். அதன் பிறகு அவர் வெளியேற வார்னர் கீப் செய்தார்
அப்போது லயன் பந்தில் யூனிஸ் கானுக்கு ஸ்டம்பிங் வாய்ப்பைக் கோட்டை விட்டார் வார்னர்.
இன்று இன்னமும் 9 ஓவர்களை கடத்த வேண்டிய ஆஸ்திரேலியா, விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் எடுத்துள்ளது. வார்னர், ராஜர்ஸ் ஆடி வருகின்றனர்.