விளையாட்டு

பிளெட்சர் பற்றிய தோனியின் கருத்திற்கு பிசிசிஐ கடும் அதிருப்தி

செய்திப்பிரிவு

ரவிசாஸ்திரி அனைத்தையும் பார்த்துக் கொள்வார் என்றாலும் பிளெட்சர்தான் எங்கள் பாஸ், அவர் 2015 உலகக் கோப்பையிலும் எங்களை வழிநடத்திச் செல்வார் என்று தோனி கூறியிருப்பது அவரது சொந்தக் கருத்து என்று பிசிசிஐ செயலர் சஞ்சய் படேல் கூறியுள்ளார்.

இது குறித்து தனியார் சானலுக்கு அவர் கூறும்போது, “நான் தோனியிடம் இதுபற்றிப் பேசவில்லை, பிசிசிஐ அவரது கருத்துக்கு வினையாற்றாது. தோனி பிளெட்சர் பற்றிக் கூறியது அவரது சொந்தக் கருத்தே” என்று கூறிய அவர், கிரிக்கெட் வாரியத்தின் முடிவுகளை அவரது கருத்துக் கட்டுப்படுத்தாது என்று தெளிவுபடுத்தினார்.

இது குறித்து பிசிசிஐயின் முக்கிய அதிகாரி ஒருவர் பெயரைக் குறிப்பிடாமல் செய்தி நிறுவனம் ஒன்றிற்குக் கூறுகையில், ”தோனி தன் எல்லையை மீறியுள்ளார். அவரது கூற்று பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. இந்திய கேப்டன் கூறியது பற்றி கிரிக்கெட் வாரியத்தின் அடுத்த செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும். அணியின் பாஸ் யார் என்பதை தோனி தீர்மானிக்கக் கூடாது.

இந்திய கேப்டனாக தோனி கொஞ்சம் எல்லை மீறிவிட்டார். ஊடகங்கள் எந்தக் கேள்வியை வேண்டுமானாலும் கேட்கும், ஆனால் ஒரு கேப்டனாகவும் முதிர்ந்த கிரிக்கெட் வீரராகவும் தனது எல்லைகளை அவர் வரையறுத்துக் கொள்வது அவசியம். அணியில் விளையாடும் 11 வீரர்கள் யார் என்பதை எப்படி பிசிசிஐ தீர்மானிக்காதோ அதேபோல் அணியின் பயிற்சியாளர் எதுவரை நீடிப்பார் என்பதை தோனி தீர்மானிக்க முடியாது” என்று கடுமையாக சாடியுள்ளார்.

முன்னதாக தோனி பிளெட்சர் பற்றியும் ரவிசாஸ்திரி பற்றியும் கூறுகையில், ரவி சாஸ்திரி அனைத்து விஷயங்களையும் பார்த்துக் கொள்வார், ஒரு மேலாளர் போல் செயல்படுவார். ஆனால் பிளெட்சர்தான் பாஸ். 2015 உலகக் கோப்பை போட்டிகளுக்கும் அவர் எங்களை வழி நடத்திச் செல்வார் என்றார்.

மேலும் ரவி சாஸ்திரி இந்தியாவுக்கு விளையாடியதை பெரும் பேறாகக் கருதும் ஒரு முன்னாள் வீரர், அவர் மிகவும் பாசிடிவ் மனநிலை படைத்தவர்.

போராடும் குணத்தையும், சரியான இயல்பூக்கங்களை நம்புவதிலும் ரவி சாஸ்திரி சிறந்தவர் ஆகவே அவர் இருப்பது மிக நல்ல விஷயம்.

வீரர்களுடன் அவர்களது மொழியிலேயே உரையாட அவரால் முடியும் இது பெரிய அளவுக்கு அணிக்கு உதவும்.

SCROLL FOR NEXT