இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி, இந்தியா வெற்றி பெற 42 ஓவர்களில் 297 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. நியூசிலாந்தின் துவக்க ஆட்டக்காரர் ரைடர் 20 ரன்களுக்கு ஷமியின் ஓவரில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வில்லியம்சன், கப்டிலுடன் இணைந்து ரன் குவிக்கத் தொடங்கினார். ஆட்டத்தின் 16-வது ஓவரில் மழையால் ஆட்டம் தடைபட்டது.
சிறிது நேரத்தில் ஆட்டம் தொடர்ந்தது. 20-வது ஓவரில் ரைனாவின் பந்துவீச்சில் கப்டில் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டெய்லர் களமிறங்க, வில்லியம்சன் தனது அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்து, அரை சதத்தைக் கடந்தார். மறுமுனையில் டெய்லரும் ரன் சேர்க்க ஆரம்பித்தார். மீண்டும், 33-வது ஓவரில், மழையால் ஆட்டம் தடைபட, வீரர்கள் பெவிலியன் திரும்பினர். கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் நீடித்த மழையால், ஆட்டம் 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
மீண்டும் ஆண்டர்சன் அதிரடி
34-வது ஓவரில் ஜடேஜாவின் பந்தில் வில்லியம்சன் ஆட்டமிழக்க, முதல் ஒருநாள் போட்டியில், 40 பந்துகளில் 68 ரன்கள் குவித்த அதிரடி ஆட்டக்காரர் ஆண்டர்சன் களமிறங்கினர்.
அடுத்தடுத்து பந்துவீசிய அனைத்து பவுலர்களின் பந்துவீச்சையும் ஆண்டர்சன் பதம் பார்த்தார். 17 பந்துகளில் 5 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 44 ரன்களை குவித்த ஆண்டர்சன், இஷாந்த் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் 42 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்களை நியூசிலாந்து எடுத்தது.
'டக்வொர்த் லூயிஸ்'
மழைக்குப் பிறகு நடந்த ஆட்டத்தில், 8.4 ஓவர்களில் நியூசி. அணி 101 ரன்கள் குவித்ததால், அந்த அணியின் ரன்ரேட் உயர்த்தப்பட்டு கணக்கெடுக்கப்பட்டது. இதனால், இந்தியாவுக்கு 42 ஓவர்களில் 297 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.