இந்திய கலாசாரத்தின் ஒரு பகுதியாக பார்முலா 1 (எப்.1) கார் பந்தயம் உருவெடுக்கும் என்று மெர்ஸிடஸ் டிரைவரும், பிரிட்டன் கார் பந்தய வீரருமான லீவிஸ் ஹாமில்டன் தெரிவித்தார்.
இந்த சீசனுக்கான பார்முலா 1 கார் பந்தயத்தின் 16-வது சுற்று இந்திய கிராண்ட்ப்ரீ என்ற பெயரில் தில்லியை அடுத்த கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத்தா இண்டர்நேஷனல் சர்க்கியூட்டில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. அதில் பங்கேற்பதற்காக டெல்லி வந்துள்ள ஹாமில்டன் மேலும் கூறியது:
இந்தியாவில் போட்டியை நடத்துவதற்காக ஜேப்பி ஸ்போர்ட்ஸ் இண்டர்நேஷனல் லிமிடெட் (ஜேபிஎஸ்எல்) நிறுவனம் பெரும் முயற்சி எடுத்திருக்கிறது. புத்தா சர்க்கியூட் எல்லோரையும் கவரக்கூடிய மைதானம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் பார்முலா 1 போட்டி அட்டவணை மாறிக்கொண்டிருக்கிறது. அதன்படி அடுத்த ஆண்டு இந்தியாவில் பார்முலா 1 போட்டி நடைபெறாது. அதனால் இந்திய ரசிகர்கள் பார்முலா 1 போட்டியை நேரில் ரசிக்கும் வாய்ப்பை இழப்பார்கள். எனினும் 2015-ல் மீண்டும் இந்தியாவில் பார்முலா 1 போட்டி நடைபெறும் என உறுதியாக நம்புகிறேன்.
ஞாயிற்றுக்கிழமை நடை பெறவுள்ள இந்திய கிராண்ட்ப்ரீ போட்டியில் சிறப்பாக செயல்பட நினைத்துள்ளேன். புத்தா சர்க்கியூட்டும், கொரிய கிராண்ட்ப்ரீ போட்டி நடைபெற்ற மைதானமும் ஒரே மாதிரியானவை. எனவே கொரிய போட்டியில் பங்கேற்ற அனுபவம், இந்திய கிராண்ட்ப்ரீ போட்டியில் சிறப்பாக செயல்பட உதவும் என்றார்.
இந்தியா வந்துள்ள ஹாமில்டன் இங்குள்ள வேறு ஏதாவது விஷயங்களை அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறாரா என அவரிடம் கேட்டபோது, “இந்தியாவில் உள்ள வாழ்க்கை முறை, உணவுப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன். இதேபோல் இங்குள்ள உணவகங்களில் சாப்பிட ஆர்வமாக இருக்கிறேன். இந்த வாரத்தின் கடைசியில் எனது குடும்பத்தினரோடு இங்குள்ள உணவகங்களுக்கு சென்று மூக்கு முட்டும் அளவுக்கு சாப்பிட முயற்சிப்பேன்” என கிண்டலாகக் கூறினார்.