சாம்பியன் லீக் கிரிக்கெட்டில் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
டிரினிடாட் அண்ட் டோபாக்கோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 38 ரன்கள் எடுத்ததன் மூலம் அவர் இந்த சாதனையை புரிந்தார்.
இதுவரை 18 போட்டிகளில் பங்கேற்றுள்ள ரெய்னா 579 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 அரைசதங்கள், 51 பவுண்டரிகள், 23 சிக்ஸர்கள் அடங்கும். சராசரி 34.05. அதிபட்ச ரன் 94*.
இதற்கு அடுத்த இடத்தில் மும்பை இண்டியன்ஸ், டிரினிடாட் அண்ட் டோபாக்கோ அணிகளுக்காக விளையாடிய பொல்லார்ட் உள்ளார். அவர் 23 போட்டிகளில் பங்கேற்று 575 ரன்கள் எடுத்துள்ளார்.
டெல்லி டேர்டெவில்ஸ், நியூசௌத் வேல்ஸ் அணிகளுக்காக விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 496 ரன்களுடன் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
கேப் கோப்ரா, டைட்டன்ஸ் அணிகளுக்காக விளையாடிய டேவிட்ஸ் 4-வது இடத்தைப் பெற்றுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முரளி விஜய் 483 ரன்களுடன் 5-வது இடத்தில் இருக்கிறார். ஜே.பி. டுமினி 450 ரன்களுடன் 6-வது இடம் பெற்றுள்ளார்.
சூப்பர் கிங்ஸ் அணியின் மைக் ஹசி (436 ரன்கள்), பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் விராட் கோலி (424 ரன்கள்) ஆகியோர் முறையே 7 மற்றும் 8-வது இடத்தைப் பிடித்துள்ளனர்.
ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையிலும் சுரேஷ் ரெய்னா முதலிடம் வகிக்கிறார் என்பது நினைவுகூரத்தக்கது. ஐபிஎல்-லில் 99 போட்டிகளில் பங்கேற்று ஒரு சதம், 18 அரைசதத்துடன் 2802 ரன்கள் எடுத்துள்ளார்.