டிஎன்பிஎல் தொடரின் 2-வது அரை இறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி பெற்றது. இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இறுதி போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் அரை இறுதி போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இதில் 38 ரன்கள் வித்தியாசத்தில் தூத்துக்குடி அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நேற்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-லைகா கோவை கிங்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் மோதின. முதலில் பேட் செய்த சேப்பாக் கில்லீஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் குவித்தது. அதிக பட்சமாக சத்யமூர்த்தி சரவணன் 39 பந்துகளில், 4 பவுண்டரிகள், 2 சிக்ஸருடன் 52 ரன்களும், கோபிநாத் 44, சதீஷ் 18 ரன்கள் சேர்தனர். கோவை அணி தரப்பில் விக்னேஷ், ஹரிஸ் குமார் தலா இரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 162 ரன்கள் இலக்குடன் கோவை அணி பேட்டிங்கை தொடங்கியது. அனிருதா சீதா ராம் 23, ரோஹித் 2, சையது முகமது 6 ரன்களில் ஆட்டமிழந்தனர். 10 ஓவர்களில் கோவை அணி 68 ரன்கள் சேர்த்தது. நட்சத்திர வீரர் சூர்ய பிரகாஷ் 28 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த தருண் நிவாஸ் 21, ஹரிஸ்குமார் 13, அக் ஷய் நிவாசன் 27 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்தோனி தாஸ் பந்து வீசினார். 2-வது பந்தில் முகமது ஆட்டமிழந்தார். கடைசி பந்திலும் விக்கெட் விழ 20 ஓவர்களில் முடிவில் கோவை அணி 9 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சேப்பாக் அணி தரப்பில் அந்தோனி தாஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.