விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ஜோகோவிச்- சானியா, பயஸ் ஜோடிகளும் முன்னேற்றம்

செய்திப்பிரிவு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, குரோஷியாவின் இவான் டுடிக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.

பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் சானியா மிர்சா ஜோடி காலிறுதி சுற்றில் 6-1,3-6, 10-6 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் யங் ஜன் ஷான், பெலாரசின் மேக்ஸ் மிர்னி ஜோடியை தோற்கடித்தது. அரையிறுதியில் சானியா ஜோடி, தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள பிரான்சின் கிறிஸ்டினா மெலடென்கோவிக், அமெரிக்காவின் பாப் பிரையன் ஜோடியை எதிர்கொள்கிறது.

மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி 6-4, 6-3 என்ற நேர் செட்டில் ரஷ்யாவின் எலினா வெஸ்னினா, பிரேசிலின் புருனோ சோரஸ் ஜோடியை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோவிச், 6-3, 7-5, 6-3 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள செக்குடியரசின் தாமஸ் பெர்டிச்சை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் 4 ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கார்பைன் முகுருசா 7 5, 6 3 என்ற நேர்செட் கணக்கில் அமெரிக்காவை சேர்ந்த ஷெல்பி ரோஜர்சை வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.

SCROLL FOR NEXT