சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் ரசிகர் முகமது பஷீர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் எங்கெல்லாம் நடைபெறுகிறதோ. அங்கெல்லாம் பஷீர் இருப்பார். பாகிஸ்தான் கொடியுடன் இந்தியக் கொடியையும் அவர் கையில் வைத்திருப்பதைப் பார்க்க முடியும். கிரிக்கெட் விளையாட்டை ஒளிபரப்பும் எந்தவொரு தொலைக்காட்சியும் முகமத் பஷிரை காண்பிக்கத் தவறியதே இல்லை.
தொலைக்காட்சிகளில் அடிக்கடி காண்பிக்கப்பட்டதால் மட்டுமல்ல இந்திய அணியின் முன்ளாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி மீது பஷீர் கொண்ட அன்பினாலும் கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து பிரபலமடைந்திருக்கிறார்.
கிரிக்கெட் ரசிகர்களால் 'சாச்சா சிகாகோ' என்று அழைக்கப்படும் முகமத் பஷீர் (64) பாகிஸ்தானின் கராச்சியில் பிறந்தவர். தற்போது அமெரிக்காவின் சிகாகோ நகரில் விடுதி ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீழ்ச்சி கண்டு வருவதால் வரும் ஜீன் 1-ம் தேதி தொடங்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். அவரது இந்த விருப்பம் கிரிக்கெட் ரசிகர்களால் நம்ப முடியாததாகவே பார்க்கப்படுகிறது.
சாம்பியன்ஸ் டிராபி குறித்து முகமத் பஷீர் கூறும்போது, "இந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டியை பொறுத்தவரை, இந்திய அணி பாகிஸ்தானை விட பல மடங்கு முன்னிலையில் உள்ளது" என்றார்.
கடந்த ஆறு வருடங்களில் முதல் முறையாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பங்குபெறும் கிரிக்கெட் பார்க்கமுடியாமல் போய் உள்ளதாக வருத்தமும் தெரிவித்துள்ளார் முகமத் பஷீர்.
அதுகுறித்து அவர் கூறும்போது, " 2011-ம் ஆண்டு மொஹாலியில் நடத்த உலக கோப்பைப் போட்டி முதல், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே நடத்த அனைத்து கிரிக்கெட் போட்டியையும் நான் மைதானத்துக்கு நேரில் சென்று பார்த்திருக்கிறேன்.
ஆனால் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இம்மாதத்தில் குடும்பத்துடன் மெக்கா செல்ல முன்பே திட்டமிட்டிருந்தேன். அதனால் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கும் போட்டியைக் காண முடியாத சூழல் உருவாகியுள்ளது. இது எனக்கு மிகப் பெரிய வருத்தம்தான். ஆனால் இப்போட்டியில் இந்தியா பாகிஸ்தானை கண்டிப்பாக வென்று சாம்பியன்ஸ் டிரபியை வெல்லும்.
நான் இன்னும் பாகிஸ்தானை விரும்புகிறேன். ஆனால் தற்போது பாகிஸ்தானைவிட இந்தியாவை கூடுதலாக நேசிக்கிறேன். பாகிஸ்தான் வெல்ல வேண்டும் என்றுதான் முன்பு நினைத்தேன் ஆனால் தற்போது இந்தியா வெல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.
2011-ம் ஆம் ஆண்டு எனது முதல் இந்திய பயணத்தின்போது எனக்கு கிடைத்த அன்பைக் கண்டு நான் நெகிழ்ந்து போனேன். நான் தற்போது பாகிஸ்தானைவிட இந்தியாவுக்குதான் அதிகம் முறை வந்து செல்கிறேன். இந்தியாவிலிருக்கும்போது பாதுகாப்பாக உணர்கிறேன்" என்றார்.
சாம்பியன்ஸ் டிராபி கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி வரும் ஜூன் 4-ம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.