ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ், நேற்று பிரதர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்களில் ஒருவரான நர்சிங் யாதவ். ரியோ ஒலிம்பிக் போட்டியில் 74 கிலோகிராம் எடைப்பிரிவிலான ப்ரீஸ்டைல் மல்யுத்த போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றிருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதைத் தொடர்ந்து, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அவருக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த விஷயத்தில் தான் நிரபராதி என்று கூறிய நர்சிங் யாதவ், தனக்கு எதிராக சதி நடந்திருப்பதாக குற்றம் சாட்டினார். இந்நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்திய தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம், நேற்று முன்தினம் ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கிய வழக்கில் இருந்து நர்சிங் யாதவை விடுவித்தது. ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவும் அனுமதி அளித்தது.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தனக்கு அனுமதி வழங்கப்பட்ட தைத் தொடர்ந்து நர்சிங் யாதவ், நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின்போது இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ்பூஷன் ஷரன் சிங்கும் உடனிருந்தார்.
இந்த சந்திப்பு குறித்து நர்சிங் யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:
ஊக்கமருந்து விவகாரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த தற்கு நன்றி தெரிவிக்கவும், ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற வாழ்த்து பெறவும் நான் பிரதமரைச் சந்தித்தேன் அவர் எனக்கு வாழ்த்து கூறினார். எந்த பதற்றமும் இல்லாமல், எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதை நோக்கமாகக் கொண்டு செயல் படுமாறு அறிவுரை கூறினார். ஊக்கமருந்து விவகாரத்தில் எனக்கு ஆதரவாக இருந்தவர் களுக்கும், இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கும் என் நன்றி. எனக்கு நடந்ததைப் போன்ற சம்பவம் வேறு எந்த வீரருக்கும் நடக்கக் கூடாது. இது விளை யாட்டுத் துறைக்கு நல்லதல்ல.
இவ்வாறு நர்சிங் யாதவ் கூறினார்.