கிரிக்கெட் கமிட்டி சேர்மனாக இருக்கும் இந்திய அணி பயிற்சியாளர் அனில் கும்ப்ளே ஐசிசி ஆண்டுக்கூட்டத்தில் கலந்து கொள்வதால் மே.இ.தீவுகள் தொடருக்கு அவர் இந்திய அணியுடன் செல்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஐசிசி ஆண்டுக் கூட்டம் நேற்று தொடங்கி ஜூன் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூன் 22-ம் தேதி கும்ப்ளே சேர்மனாக இருக்கும் ஐசிசி கிரிக்கெட் கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் கிரிக்கெட் விதிமுறைகள், கட்டுப்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதால் அனில் கும்ப்ளே சேர்மனாக பங்கேற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஒருவேளை அவர் கூட்டம் முடிந்த பிறகு மே.இ.தீவுகளுக்குச் சென்று இந்திய அணியுடன் இணையும் வாய்ப்பு பற்றி பிசிசிஐ தரப்பில் தகவல்கள் இல்லை.
இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “இது வேடிக்கையாக உள்ளது, ஐசிசி கூட்டம் பற்றி சில மாதங்களுக்கு முன்பே தெரியும், மே.இ.தீவுகள் தொடரும் ஏற்கெனவே அறிந்ததுதான், எனவே அவரை மே.இ.தீவுகள் பயணத்திற்கு பயிற்சியாளராக தொடர வேண்டும் என்று கூறப்பட்ட போதே கும்ப்ளே முடிவெடுத்திருக்க வேண்டும், இப்போது இப்படி ஒரு செய்தி எழுவது கும்ப்ளேயால் பயிற்சியாளராகத் தொடர முடியவில்லையோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது” என்றார்.
ஆனால் இந்தச் செய்தி குறித்து பிசிசிஐ, ஐசிசி தரப்பிலிருந்து எந்த ஒரு தகவலும் இதுவரை இல்லை.