சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் நடைபெற்று வரும் ஐ.டி.எஃப். டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் ஜீவன் நெடுஞ்செழியன் வெற்றி கண்டார். இதன்மூலம் ஐடிஎஃப் டென்னிஸில் தனது 50-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த ஜீவன் நெடுஞ்செழியன்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் சுற்றில் ஜீவன் நெடுஞ்செழியன் 6-0, 6-0 என்ற நேர் செட்களில் வைல்ட்கார்ட் வீரரான பிரதீக் பஷ்கர் பாக்ஸியை தோற்கடித்தார்.
ஐடிஎஃப் டென்னிஸ் போட்டியில் முதல்முறையாக பங்கேற்றுள்ள பிரதீக், முதல் செட்டின் முதல் கேமிலேயே ஜீவனின் சர்வீஸை முறியடிக்கும் வாய்பைப் பெற்றார். எனினும் கடுமையாகப் போராடிய ஜீவன், அந்த சர்வீஸை தன்வசமாக்கிக் கொண்டார். அதன்பிறகு அபாரமாக ஆடிய ஜீவன், 2, 4 மற்றும் 6-வது கேம்களில் பிரதீக்கின் சர்வீஸை முறியடித்து அந்த செட்டை கைப்பற்றினார். பின்னர் நடைபெற்ற 2-வது செட்டிலும் அபாரமாக ஆடிய ஜீவன் அந்த செட்டையும் முதல் 6 கேம்களிலேயே முடிவுக்கு கொண்டு வந்தார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ராம் பாலாஜி 6-4, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் சந்திரில் சோட்டை தோற்கடித்தார். போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ரஞ்சித் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் தகுதிச்சுற்று வீரரான கஜகஸ்தானின் டிமுர் கபிபுலினையும், போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள விஜய் சுந்தர் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் சேக் அப்துல்லாவையும் வீழ்த்தினர். -பிடிஐ