சர்வதேச டி20 கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. முதலிடத்தில் இருந்த இலங்கை அணி 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் இந்திய அணி, குரூப் சுற்றில் ஓர் ஆட்டத்தில்கூட தோற்காமல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதன்மூலம் 7 ரேட்டிங் புள்ளிகளைப் பெற்ற இந்தியா ஒட்டுமொத்தமாக 130 ரேட்டிங் புள்ளிகளை எட்டியுள்ளது.
இலங்கை அணியும் 130 ரேட்டிங் புள்ளிகளை வைத்திருந்தாலும் டெசிமல் புள்ளிகள் அடிப்படையில் இந்தியா முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. இந்தியா முதலிடத்தைத் தக்கவைப்பதும், இலங்கை மீண்டும் முதலிடத்தைப் பிடிப்பதும் உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதிப் போட்டிகளில் அந்த அணிகள் எப்படி விளையாடுகிறது என்பதைப் பொறுத்தே அமையும்.
டி20 உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 6-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அதேவேளையில் உலகக் கோப்பை போட்டியில் ஆறுதல் வெற்றியை மட்டுமே பெற்ற ஆஸ்திரேலியா 5-வது இடத்தில் இருந்து 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. உலகக் கோப்பை போட்டியின் மூலம் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 ரேட்டிங் புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில், ஆஸ்திரேலியா 5 ரேட்டிங் புள்ளிகளை இழந்துள்ளது.
தனிநபர்கள் தரவரிசையில் இந்திய பேட்ஸ்மேன் விராட் கோலி ஓர் இடம் முன்னேறி, 3-வது இடத்தையும், அஸ்வின் 16 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
அஸ்வினுக்கு இதுதான் அதிகபட்ச தரவரிசை. பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் முதலிடத்திலும், இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் 2-வது இடத்திலும் உள்ளனர். பவுலர்கள் தரவரிசையில் மேற்கிந்தியத் தீவுகளின் சாமுவேல் பத்ரி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இதனால் அவருடைய சகநாட்டவரான சுநீல் நரேன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். டி20 உலகக் கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்னதாக நரேனைவிட ஒரேயொரு ரேட்டிங் புள்ளி குறைவாக பெற்றிருந்தார் பத்ரி.
உலகக் கோப்பையில் 4 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார் பத்ரி. இலங்கை வீரர் குசல் பெரேரா, தென் ஆப்பிரிக்க வீரர் ஜே.பி.டுமினி ஆகியோர் முதல்முறையாக தரவரிசையில் டாப்-10-க்குள் நுழைந்துள்ளனர். பெரேரா 5-வது இடத்திலும், டுமினி 8-வது இடத்திலும் உள்ளனர்.