ஏஜியஸ் பவுல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை இங்கிலாந்து அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து 2-0 என்று கைப்பற்றியுள்ளது.
ஸ்டோக்ஸின் 77 பந்து சதத்துடன் 330 ரன்களை எட்டிய இங்கிலாந்து, பிறகு தென் ஆப்பிரிக்க அணியை விறுவிறுப்பான கடைசி நேர ஆட்டத்தில் 328 ரன்களுக்கு மட்டுப்படுத்தியது. கிரீசில் எங்கு போட்டாலும் அடிக்கக் கூடிய திறமை வாய்ந்த கிறிஸ் மோரிஸ், டேவிட் மில்லர் இருந்தும் மார்க் உட் வீசிய கடைசி ஓவரில் வெற்றியை ஈட்ட முடியவில்லை, கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்காவுக்குத் தேவை 7 ரன்களே.
கடைசி 6 ஓவர்களில் 60 ரன்கள் தேவை என்ற நிலையில் டேவிட் மில்லர் 51 ரன்களுடனும் காட்டடி வீரர் கிறிஸ் மோரிஸ் 1 ரன்னுடனும் கிரீசில் இருந்தனர்.
அப்போதுதான் மார்க் உட் 45-வது ஓவரை அற்புதமாக வீசி 4 ரன்களையே விட்டுக் கொடுத்தார். ஆனால் அடுத்த ஓவரில் லியாம் பிளங்கெட் ஓவரில் கிறிஸ் மோரிஸ் ஒரு பவுண்டரி ஒரு அபார சிக்ஸ் அடிக்க 14 ரன்கள் வந்தது. 47-வது ஓவரில் காரத் பால் 9 ரன்களை விட்டுக் கொடுக்க கடைசி 3 ஓவர்களில் 33 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அப்போது மார்க் உட் ஓவரில் கிறிஸ் மோரிஸ் ஒரு டாப் எட்ஜ் பவுண்டரியையும் ஒரு மோசமான லெந்த் பந்தை மிட்விக்கெட்டில் மிகப்பெரிய சிக்சரையும் அடிக்க 13 ரன்கள் இந்த ஓவரில் வந்தது.
12 பந்துகளில் 20 ரன்கள் என்ற நிலையில் காரத் பால் 49-வது ஓவரை வீசினார், இதில் முதல் பந்தை நேராக மிகமிகப்பெரிய சிக்ஸ் ஒன்றை விளாசினார் மில்லர். அடுத்த பந்தும் ராட்சத அடியில் பவுண்டரி பறந்தது. ஆனால் அடுத்த 4 பந்துகளை சுதாரிப்புடன் பால் வீச 3 ரன்களே வந்தது.
ஆனாலும் கடைசி ஓவரில் 7 ரன்கள் என்பது இலகுவானதே, அப்போது மார்க் உட் வீசினார் கடைசி ஓவரை. மார்க் உட், மிக சாதுரியமாக கிறிஸ் மோரிஸின் ஷார்ட் பிட்ச் பந்துக்கு எதிரான பலவீனத்தைப் பயன்படுத்தி வீசினார். அடுத்தடுத்து சுழற்று சுழற்றென்று மட்டையாளர்கள் மில்லரும், மோரிசும் சுற்றியும் 4 சிங்கிள்களையே எடுக்க முடிந்தது, தென் ஆப்பிரிக்கா தொடரை இழந்தது.
ஆனால் கடைசி 5 ஓவர்களும், குறிப்பாக கடைசி 3 ஓவர்களிலும் இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் பவுலர்களிடம் பேசிப்பேசி தாமதப்படுத்தினார். இது இங்கிலாந்தின் சாம்பியன்ஸ் டிராபி டெக்னிக்காகவும் அமையலாம், பேட்ஸ்மென்களின் ரிதத்தை கெடுக்க இவ்வாறு உத்தியைக் கையாள வாய்ப்புள்ளது.
முன்னதாக குவிண்டன் டி காக் 103 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 98 ரன்களை விளாசினார். ஆம்லா 24 ரன்களில் ஸ்டோக்சிடம் ஆட்டமிழந்தார். டுபிளெசிஸ், 16 ரன்களில் நடையைக் கட்ட, ஏ.பி.டிவில்லியர்ஸ் 50 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்து பங்களிப்பு செய்தார். ஆனால் பிளென்கெட் இவரை வீழ்த்தியது திருப்பு முனையாக அமைந்தது. கடைசியில் டேவிட் மில்லர் 51 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 71 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். பெஹார்டீன் 17 ரன்களில் பிளன்கெட்டிடம் வீழ்ந்தார். மோரிஸ் 22 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 36 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். ஆனாலும் வெற்றி கைகூடவில்லை.
பென் ஸ்டோக்ஸ் சதம், பட்லர் விளாசல் அரைசதம்:
முன்னதாக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் இங்கிலாந்தை பேட் செய்ய அழைத்தது, ஆனால் ஜேசன் ராய் 8 ரன்களில் ரபாடாவின் அதிவேகத்துக்கு பவுல்டு ஆனார். ஹேல்ஸ் 24 ரன்களை எடுத்து டிகாக்கிடம் கேட்ச் கொடுத்து பிரிடோரியஸிடம் வீழ்ந்தார். ஜோ ரூட் மிக அருமையாக ஆடி ஊர்ந்து கொண்டிருந்த இங்கிலாந்துக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக 6 பவுண்டரிகளுடன் 41 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். 16-வது ஓவரில் இங்கிலாந்து 80/3 என்று இருந்தது.
அப்போது ஸ்டோக்ஸ், மோர்கன் இணைந்து 4-வது விக்கெட்டுக்காக 95 ரன்களைச் சேர்த்தனர். மோர்கன் இதில் சரியாக ஆடவில்லை. ஓரிரு வாய்ப்புகளையும் அளித்தார் இவர். கடைசியில் 45 ரன்களில் ரபாடாவிடம் வெளியேறினார். ஆனால் பென் ஸ்டோக்ஸ் தனது ஆக்ரோஷத்தை கைவிடாமல் ஆடி 77 பந்துகளில் சதம் கண்டார். இதில் இரண்டாவது 50 ரன்கள் 29 பந்துகளில் விளாசப்பட்டது. மொத்தம் 79 பந்துகளைச் சந்தித்த பென் ஸ்டோக்ஸ் 11 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 101 ரன்கள் எடுத்து 44வது ஓவரில் மஹராஜிடம் ஆட்டமிழந்தார்.
இவர் ஆட்டமிழந்த பிறகு பட்லர் அதிரடி ஆட்டம் ஆடி 53 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 65 ரன்களை விளாச, மொயின் அலி தன் பங்குக்கு 19 பந்துகளில் 33 ரன்களை விளாச இங்கிலாந்து 330 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளுடன் 50 ஓவர்களை நிறைவு செய்தது. தென் ஆப்பிரிக்க பந்து வீச்சில் ரபாடா மட்டுமே 10 ஓவர்களில் 50 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளுடன் சிக்கனமாக வீசினார்.
ஆட்ட நாயகனாக பென்ஸ்டோக்ஸ் தேர்வு.