கேப்டன் தோனியின் வருகையால் இந்திய அணி பலம் பெற்றுள்ளது. எனவே அவர்களுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிபெற பாகிஸ்தான் கடுமையாகப் போராட வேண்டும் என பாகிஸ்தான் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் மிஸ்பா உல் ஹக் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:
இந்திய கேப்டன் தோனி அந்த அணியின் மிகப்பெரிய துருப்பு சீட்டு. அவர் தனது அணி சரிவிலிருக்கும்போது சிறப்பாக ஆடி வலுவான நிலைக்கு எடுத்துச் செல்லக்கூடிய ஆற்றல் கொண்டவர். ஆசிய கோப்பையையும், டி20 உலகக் கோப்பை போட்டியையும் ஒப்பிட விரும்பவில்லை. ஏனெனில் இரண்டும் முற்றிலும் வித்தியாசமானவை. டி20 போட்டியில் வித்தியாசமான அணுகுமுறை தேவை.
தோனியின் வருகை இந்திய அணிக்கு மிகப்பெரிய உத்வேகமாக அமையும். அவர் மிகச்சிறந்த அனுபவசாலி. அதனால் வீரர்களிடம் இருந்து எப்படி சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டு வருவது என்பது அவருக்குத் தெரியும் என்றார்.
தோனி தலைசிறந்த டி20 கிரிக்கெட் வீரர் என்று குறிப்பிட்ட மிஸ்பா உல் ஹக், “இந்தியாவை வீழ்த்துவதற்கு அணியாக இணைந்து செயல்படுவதில் பாகிஸ்தான் தீவிர கவனம் செலுத்த வேண்டும். வங்கதேச சூழல் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்றது. அதனால் முதலில் பேட் செய்தாலும், 2-வதாக பேட் செய்தாலும் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடி ரன் குவிக்க முடியும்” என்றார்.
உலகக் கோப்பையை வெல்வதற்கு யாருக்கு வாய்ப்புள்ளது என்பது குறித்துப் பேசிய மிஸ்பா உல் ஹக், “பாகிஸ்தான் இடம்பெற்றுள்ள பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நடப்பு சாம்பியன் மேற்கிந்தியத் தீவுகள் இடம்பெற்றுள்ளன. இதில் ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகியவை கடும் சவாலாக இருக்கும். ஆனால் பாகிஸ்தான் வீரர்களிடையே நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால், அவர்கள் எந்த அணியையும் வீழ்த்துவார்கள்” என்றார்.