விளையாட்டு

ஐபிஎல் முறைகேடு தொடர்பாக பதிலளிக்க சான்டிலாவுக்கு கால அவகாசம்

செய்திப்பிரிவு

ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தில் சிக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் அஜித் சான்டிலா அது தொடர்பாக எழுத்து மூலம் பதிலளிக்க வரும் 12-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தில் சான்டிலாவுக்கு தொடர்பிருப்பதாக பிசிசிஐ ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் ரவி சவானி அறிக்கை அளித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கைக் குழு முன்பு ஆஜரான சான்டிலா, தனது தரப்பு நியாயங்களை முன்வைத்தார்.

அதன்பிறகு எழுத்து மூலமாக பதிலளிக்க தனக்கு கால அவகாசம் வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு அவருக்கு வரும் 12-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கியது.

விசாரணைக் குழு முன்பு ஆஜரான பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சான்டிலா, “எனக்கு ஆதரவாக யாரும் இல்லை. பிசிசிஐ யின் முடிவு என்னவாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும். எனக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படலாம். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. வரும் 12-ம் தேதிக்குள் எழுத்து மூலம் பதிலளிக்குமாறு என்னிடம் கூறியுள்ளார்கள். நான் அதை செய்வேன். அதன்பிறகு என்ன நடக்கிறது என பார்க்கலாம்” என்றார்.

6-வது ஐபிஎல் போட்டியின் போது எழுந்த ஸ்பாட் பிக்ஸிங் சர்ச்சை சர்வதேச கிரிக்கெட்டை உலகையே அதிரவைத்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய பிசிசிஐ ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரி ரவி சவானி, ஸ்ரீசாந்த், அங்கீத் சவாண், அஜித் சான்டிலா, சித்தார்த் திரிவேதி, அமித் சிங் ஆகியோருக்கு தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இவர்களில் ஸ்ரீசாந்த், அங்கீத் சவாண் ஆகியோருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. அமித் சிங்கிற்கு 5 ஆண்டுகளும், சித்தார்த் திரிவேதிக்கு ஓர் ஆண்டும் தடை விதிக்கப்பட்டது. அஜித் சான்டிலா கடைசியாக ஜாமீனில் வெளிவந்ததால் அவருக்கு மட்டும் இன்னும் தண்டனை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. -பிடிஐ

SCROLL FOR NEXT