ஒலிம்பிக்கில் பங்கேற்று இந்தியாவுக்காக விளையாடுவது என்பது பெரிய விஷயம், ‘ஜோக்’ அல்ல என்று சச்சின் டெண்டுல்கர் வீரர்களுக்கு ஆதரவுக்குரல் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வீரர்கள் சென்றதே செல்பி எடுக்கத்தான், பணத்தையும், வாய்ப்பையும் அவர்கள் வீணடிக்கின்றனர் என்று எழுத்தாளர் ஷோபா டே கூறியதற்கு சச்சின் பதில் அளிப்பது போல் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் ஒலிம்பிக் போட்டிகளுக்கான இந்தியாவின் நல்லெண்ணத் தூதர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“ஒலிம்பிக் போட்டிகள் உலகிலேயே மிகப்பெரிய விளையாட்டு போட்டித் தொடரும் கடும் சவால்கள் நிறைந்ததுமாகும். நாட்டிற்காக விளையாடுவது என்பது வெறும் ஜோக் அல்ல. பதக்கம் வெல்வதற்காக வீரர்கள் முழு முயற்சியில் ஈடுபடுகின்றனர். ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள அனைத்து வீரர்களுக்கும் எனது ஆதரவு எப்போதும் உண்டு.
ஆண்டுக்கணக்கில் அவர்கள் இதற்காக பணியாற்றி, உழைத்து வருகின்றனர், இந்நிலையில் நூலிழையில் தவற விடும்போது நிச்சயம் வருத்தமளிக்கவே செய்யும்.
முடிவுகள் நமக்குச் சாதகமாக இல்லாமல் போகும்போதுதான் நாம் வீரர்களை ஆதரிக்க வேண்டும். முதல் பாதியில் நமக்கு சாதகங்கள் இல்லை, ஆனால் சரிவு ஏற்படும் போது ஆதரவளிப்பதே முறை” என்று கூறினார்.