விளையாட்டு

கில்கிறிஸ்ட், வக்கார் யூனிஸுக்கு ‘ஹால் ஆப் ஃபேம்’ கௌரவம்

செய்திப்பிரிவு

பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ், ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோருக்கு ஹால் ஆப் ஃபேம் கௌரவத்தை வழங்கியுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி).

இந்த கௌரவத்தைப் பெற்றுள்ள 19-வது ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட். பாகிஸ்தானில் இருந்து ஹனீப் முகமது, இம்ரான் கான், ஜாவித் மியான்தத், வாசிம் அக்ரம் ஆகியோர் ஏற்கெனவே ஹால் ஆப் ஃபேம் கௌரவத்தைப் பெற்றுள்ளனர்.

ஹால் ஆப் ஃபேம் என்பது சிறந்த கிரிக்கெட் வீரர்களை கௌரவிக்கும் வகையில் ஐசிசி அளிக்கும் ஒரு பட்டமாகும்.

இது தனக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய கௌரவம் என்று 42 வயதாகும் வக்கார் யூனிஸ் கூறியுள்ளார்.

இதே போல் ஹால் ஆப் ஃபேம் கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது குறித்து கில்கிறிஸ்டும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணிக்காக 87 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள வக்கார் யூனிஸ், 373 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 262 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 416 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். துபையில் புதன்கிழமை நடைபெறும் பாகிஸ்தான் – இலங்கை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் போது ஐசிசி சார்பில் வக்கார் யூனிஸுக்கு ஹால் ஆப் ஃபேம் கௌரவம் அளிக்கப்பட இருக்கிறது.

ஆஸ்திரேலிய அணியின் தலை சிறந்த விக்கெட் கீப்பராகவும், அதிரடி தொடக்க வீரராகவும் ஜொலித்த கில்கிறிஸ்ட் 1999, 2003, 2007-ம் ஆண்டுகளில் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்தார்.

இந்த இருவரையும் சேர்த்து இதுவரை 71 பேர் ஹால் ஆப் ஃபேம் கௌரவத்தைப் பெற்றுள்ளனர். இம்மாத இறுதியில் மேலும் இரு வீரர்களுக்கு இதே கௌரவம் வழங்கப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT