ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இலங்கை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது. வங்கதேசத்தின் பதுல்லா நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணியில் குஷல் பெரேரா-லஹிரு திரிமானி ஜோடி முதல் விக்கெட்டுக்கு 28 ரன்கள் சேர்த்தது. பெரேரா 14 ரன்களில் ஆட்டமிழக்க, திரிமானியுடன் இணைந்தார் குமார் சங்ககாரா.
2-வது விக்கெட்டுக்கு 161
இந்த ஜோடி விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டதோடு, விரைவாகவும் ரன் சேர்த்தது. திரிமானி 56 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் அரைசத்தை எட்டினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய சங்ககாரா, முகமது ஹபீஸ் வீசிய 27-வது ஓவரில் பவுண்டரி அடித்து 50 பந்துகளில் அரைசதம் கண்டார். இது அவருடைய 84-வது அரைசதமாகும்.
இலங்கை அணி 189 ரன்களை எட்டியபோது இந்த ஜோடி பிரிந்தது. சங்ககாரா 65 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 24.2 ஓவர்களில் 161 ரன்கள் குவித்தது.
இதையடுத்து மஹேல ஜெயவர்த்தனா களம்புகுந்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய திரிமானி தனது 2-வது சதத்தைப் பூர்த்தி செய்தார். அவர் 107 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் சதம் கண்டார். அவர் 102 ரன்கள் எடுத்து அஜ்மல் பந்துவீச்சில் போல்டு ஆனார்.
இதன்பிறகு ஜெயவர்த்தனா 13, திசாரா பெரேரா 6, டி சில்வா 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். எனினும் கடைசிக் கட்டத்தில் கேப்டன் மேத்யூஸ் அதிரடியாக விளையாட, இலங்கை 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் குவித்தது. மேத்யூஸ் 50 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 55, தினேஷ் சன்டிமல் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் உமர் குல், அப்ரிதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியில் ஷர்ஜீல்கான் 23 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அஹமது ஷெஸாத் 28 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த ஹபீஸ் 18, மஸூத் 17 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 4 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்திருந்தது பாகிஸ்தான்.
இதன்பிறகு கேப்டன் மிஸ்பா உல் ஹக்கும் உமர் அக்மலும் சிறப்பாக ஆடி பாகிஸ்தானை தூக்கி நிறுத்தினர். உமர் அக்மல் வேகமாக விளையாட பாகிஸ்தான் 37.5 ஓவர்களில் 200 ரன்களை எட்டியது. அந்த அணி 242 ரன்களை எட்டியபோது அக்மல் ஆட்டமிழந்தார். அவர் 72 பந்துகளில் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 5- வது விக்கெட்டுக்கு 19 ஓவர்களில் 121 ரன்கள் சேர்த்தது.
அக்மல் ஆட்டமிழந்தது திருப்புமுனையாக அமைந்தது. பின்னர் வந்த அப்ரிதி 4 ரன்களில் வெளியேற, கேப்டன் மிஸ்பா 73 ரன்களில் (84 பந்துகள்) ஆட்டமிழந்தார். இதனால் பாகிஸ்தான் வெற்றிக்கு கடைசி 5 ஓவர்களில் 43 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதன்பிறகு உமர் குல் 2 ரன்களில் வெளியேற, கடைசி 3 ஓவர்களில் 34 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. லக்மல் வீசிய 48-வது ஓவரில் 17 ரன்கள் கிடைக்க, அடுத்த இரு ஓவர்களில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மலிங்கா வீசிய 49-வது ஓவரின் 2-வது பந்தில் அஜ்மல் (10 ரன்கள்) ஆட்டமிழந்தார். அதே ஓவரின் 4-வது பந்தில் பிலவால் பட்டியும் (18 ரன்கள்) போல்டாக, 284 ரன்களுக்கு சுருண்டது பாகிஸ்தான். இலங்கை வீரர் மலிங்கா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.