ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான அணி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் தோனி மட்டுமே ஒரே விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டது குறித்து அணித்தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார்.
அதாவது, அழுத்தமான சூழ்நிலைகளில் தோனி மிக முக்கியமான பேட்ஸ்மென், மேலும் கடந்த 10-12 ஆண்டுகளில் விக்கெட் கீப்பராக தோனி அபாரமாகச் செயல்பட்டு வருகிறார், அவர் தவறு செய்வதே அரிது என்று எம்.எஸ்.கே. பிரசாத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, இருந்த போதிலும் ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ரெய்னா, ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் ஆகியோரையும் ரிசர்வில் வைத்திருக்கிறோம், வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்குரும் உள்ளார், இவர்கள் தேசிய கிரிக்கெட் அகாதெமியில் பயிற்சியில் ஈடுபடுவார்கள்.
பிசிசிஐ இவர்களுக்கான விசாக்களுக்கான நடைமுறைகளைத் தொடங்கும், எனவே பதிலி வீரர்கள், விக்கெட் கீப்பர் தேவைப்பட்டால் இந்த 5 வீரர்களும் தயாராக உள்ளனர்.
அனைத்து வீரர்களும் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் ஆடிய ஆட்டத்தை வைத்தே அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடுவதை வைத்து மட்டுமல்ல, என்றார் பிரசாத்.
ஜூன் 4-ம் தேதி எட்ஜ்பாஸ்டனில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முதல் போட்டியில் ஆடுகிறது. ஜூன் 8-ம் தேதி இலங்கையையும், ஜூன் 11-ம் தேதி தென் ஆப்பிரிக்காவையும் இந்திய அணி சந்திக்கிறது.