விளையாட்டு

சேவாக் மீது மட்டும் குற்றம்சாட்டுவது நியாயம் அல்ல: காம்பிர்

செய்திப்பிரிவு

ரஞ்சி கிரிக்கெட்டில் டெல்லி அணி காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்ததற்கு அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் மீது மட்டும் குற்றம்சாட்டுவது நியாயமற்றது என்று அந்த அணியின் கேப்டன் கௌதம் கம்பீர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “சேவாக்கிற்கு இந்த சீசன் சிறப்பானதாக அமையவில்லை. விளையாட்டில் இதுபோன்று நடப்பது சகஜம்தான். அணியை முன்னோக்கி எடுத்துச் செல்வது மிதுன் மன்ஹாஸ் மற்றும் என்னுடைய பொறுப்பாக இருந்தது. பஞ்சாபுக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் பெரிய அளவில் முன்னிலை பெறாததுதான் எங்களின் பின்னடைவுக்கு காரணமாக அமைந்தது. டெல்லி அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறாமல் போனதற்கு சேவாக் மீது மட்டும் குற்றம்சாட்டுவது சரியானது அல்ல என்றார்.

ஹரியாணாவைச் சேர்ந்த இளம் வீரர் நவ்தீப் சைனியை டெல்லி அணியில் சேர்த்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அவரை சேர்த்தது சரியே எனக் கூறிய கம்பீர், “ஆடும் லெவனைத் தேர்வு செய்யும்போது ஒரு வீரர் திறமையானவராக இருக்கும்பட்சத்தில் அவர் வேறு மாநிலத்தவராக இருந்தாலும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நவ்தீப்பை சேர்த்தற்காக இப்போது கேள்வி எழுப்புகிறவர்கள் கடந்த காலங்களில் டெல்லி அணிக்காக வெளிமாநிலத்தவர் எத்தனை பேர் விளையாடியிருக்கிறார்கள் என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். நவ்தீப்பை சேர்த்ததற்காக விமர்சிப்பவர்களுக்கு நான் பதில்கூற விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரையில் ஒரு வீரர் அணிக்கு முக்கியமானவரா, இல்லையா என்பதுதான் முக்கியம்” என்றார்.

ஜாக்ஸ் காலிஸின் ஓய்வு குறித்துப் பேசிய கம்பீர், “கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் டிரெஸ்ஸிங் அறையில் காலிஸுடன் வியக்கத்தக்க நேரங்களை பகிர்ந்திருக்கிறேன். இன்றைய சாதனைகள் நாளை மற்றொருவரால் முறியடிக்கப்படலாம். அவர் கிரிக்கெட்டில் ஜாம்பவான் மட்டும் அல்ல, டெஸ்ட் கிரிக்கெட்டில் 13 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்திருப்பதோடு, 292 விக்கெட்டுகளையும், 200 கேட்சுகளையும் பிடித்திருக்கிறார். அவர் களத்தில் ஏராளமான சாதனைகள் படைத்திருந்தாலும், எவ்வித சுயநலமும் இன்றி விளையாடிய அவருடைய மனப்பாங்கு இப்போதும் பேசப்படக்கூடியதாக இருக்கிறது” என்றார்.

SCROLL FOR NEXT