டி20 போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். பந்து வீச்சாளர்களுக்கான பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா 2-வது இடத்துக்கு முன்னேறினார்.
டி20 கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டது. இதில் சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். அவர் மொத்தம் 799 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் 787 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், நியூஸிலாந்து வீரர் வில்லியம்சன் 745 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் விராட் கோலியைத் தவிர இந்திய வீரர்கள் யாரும் 10 இடங்களுக்குள் வரவில்லை.
டி 20 போட்டிகளுக்கான பந்து வீச்சாளர்கள் வரிசையில் பாகிஸ்தான் வீரர் இமாத் வாசிம் 780 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இந்திய வீரரான ஜஸ்பிரித் பும்ரா 3-வது இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அவர் மொத்தம் 764 புள்ளிகளை பெற்றுள்ளார். தென் ஆப்ரிக்க வீரரான இம்ரான் தகிர் 744 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் மற்றொரு இந்திய வீரரான அஸ்வின் 644 புள்ளிகளுடன் 10-வது இடத்தில் உள்ளார்.
ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன் முதல் இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் 2-வது இடத்திலும், அப்கானிஸ்தான் வீரர் முகமது நபி 3-வது இடத்திலும் உள்ளணர். இந்திய வீரர்களான யுவராஜ் சிங் 5-வது இடத்திலும், சுரேஷ் ரெய்னா 9-வது இடத்திலும் உள்ளனர்.
சிறந்த டி 20 அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் நியூஸிலாந்து அணி முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து 2-வது இடத்திலும், பாகிஸ்தான் 3-வது இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.