விளையாட்டு

ஆசிய விளையாட்டுப் போட்டி: தங்கம் வென்றார் மேரி கோம்

பிடிஐ

ஆசிய விளையாட்டுப் போட்டியின் 13-வது நாளில் இந்தியாவுக்கு ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்கள் கிடைத்தன.

தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற மகளிர் ஃபிளை வெயிட் (51 கிலோ எடை) பிரிவில் இந்தியாவின் மேரி கோம் தங்கம் வென்றார். இதன்மூலம் ஆசிய விளையாட்டில் மகளிர் குத்துச்சண்டையில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிச்சுற்றில் மேரி கோம் 2-0 என்ற கணக்கில் கஜகஸ்தானின் ஜைனா செகர்பெகோவாவைத் தோற்கடித்தார். இந்தப் போட்டியின் ஆரம்பத்தில் பின்தங்கிய மேரி கோம், பின்னர் சரிவிலிருந்து மீண்டார். 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரான மேரி கோம், கடந்த முறை ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் குத்துச்சண்டை அறிமுகப்படுத்தப்பட்டபோது வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.

தங்கப் பதக்கம் வென்றது குறித்துப் பேசிய மேரி கோம், “ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த முறை ஆசிய விளை யாட்டுப் போட்டியிலும், ஒலிம்பிக் கிலும் வெண்கலப் பதக்கம் வென்றேன். இப்போது தங்கப் பதக்கம் வென்றிருக்கிறேன். எனது குடும்ப வாழ்க்கையை தியாகம் செய்துவிட்டு எனது குழந்தைகளைக்கூட பார்க்காமல் கடுமையாக உழைத்தேன். எனக்கு ஆதரவளித்த எனது நாட்டு மக்களுக்கு நன்றி. 3 குழந்தை களுக்கு தாயான பிறகும் ஆசிய சாம்பியனாக இருக்கிறேன். அனைவருக்கும் நன்றி” என்றார்.

காமன்வெல்த் போட்டிக்கான அணித் தேர்வு முகாமில் சக நாட்டவரான பிங்கி ஜங்ராவிடம் சர்ச்சைக்குரிய முறையில் தோற்றது தனக்கு கூடுதல் ஊக்கத்தை கொடுத்ததாகக் கூறிய மேரி கோம், “காமன்வெல்த் போட்டிக்கான அணித் தேர்வு சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் நடைபெற்றதாக நினைக்கவில்லை. அந்த சம்பவம்தான் என்னை நிரூபிப் பதற்கான ஊக்கத்தைக் கொடுத்தது. இப்போது என்னை நிரூபித்துவிட்டேன். ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வெல்வதற்காக இரண்டு மடங்கு உழைத்திருக்கிறேன். நாட்டுக்காக தங்கம் வென்றது இப்போது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது” என்றார்.

தின்டு லூக்காவுக்கு வெள்ளி

மகளிர் 800 மீ. ஓட்டத்தில் இந்திய வீராங்கனை தின்டு லூக்கா வெள்ளிப் பதக்கம் வென்றார். அவர் 1 நிமிடம், 59.19 விநாடிகளில் இலக்கை எட்டினார். இதேபிரிவில் கஜகஸ்தானின் முகாஷேவா மார்கரிட்டா 1 நிமிடம் 59.02 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கம் வென்றதோடு, 20 ஆண்டுகால ஆசிய சாதனையையும் (1:59.85) முறியடித்தார்.

அன்னு ராணிக்கு வெண்கலம்

மகளிர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் அன்னு ராணி வெண்கலப் பதக்கம் வென்றார். அவர் தனது முதல் வாய்ப்பில் 59.33 மீ. தூரம் ஈட்டி எறிந்ததன் மூலம் வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன்மூலம் தனது “பெர்சனல் பெஸ்டை”யும் அவர் பதிவு செய்தார். முன்னதாக கடந்த ஜூனில் 58.83 மீ. தூரம் எறிந்ததே அவரின் “பெர்சனல் பெஸ்டாக” இருந்தது.

ஹாக்கியில் வெண்கலம்

மகளிர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை தோற்கடித்து வெண்கலப் பதக்கம் வென்றது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மகளிர் அணி பதக்கம் வென்றுள்ளது. கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஜப்பானிடம் தோற்ற இந்திய அணி, இந்த முறை ஜப்பானை வீழ்த்தியிருப்பது குறிப் பிடத்தக்கது. ஆடவர் ஹாக்கிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் இடை யிலான இறுதிப் போட்டி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடை பெறுகிறது.

SCROLL FOR NEXT