சச்சின் டெண்டுல்கர் – ஷேன் வார்ன் ஆகியோர் தலைமையிலான அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஜூலை மாதம் நடைபெறவுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தின் 200-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் மற்றும் ரெஸ்ட் ஆப் வேர்ல்ட் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதில் மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் அணிக்கு சச்சின் டெண்டுல்கர் கேப்டன் பொறுப்பை ஏற்கிறார். ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் ரெஸ்ட் ஆப் வேர்ல்ட் அணிக்கு கேப்டனாகிறார். இப்போட்டியில் பங்கேற்க சச்சின், வார்ன் ஆகியோர் சம்மதம் தெரிவித்துள்ளனர் என்ற தகவல் மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அவர்கள் இருவருக்குமே மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் வாழ்நாள் உறுப்பினர்கள் என்ற கௌரவத்தை ஏற்கனவே வழங்கியுள்ளது. ஜூலை 5-ம் தேதி நடைபெறும் இந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ராகுல் திராவிட் உள்ளிட்ட முன்னாள் பிரபல வீரர்களும் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.