விளையாட்டு

தற்போது யார் சிறந்த பேட்ஸ்மென் என்ற விவாதம் தேவையில்லை: ரிக்கி பாண்டிங் கருத்து

பிடிஐ

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இந்தியா வந்துள்ள ரிக்கி பாண்டிங், தற்போதைய கிரிக்கெட் உலகில் விராட் கோலி, ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் இவர்களில் யார் சிறந்தவர் என்ற ஒப்பீடும், விவாதமும் அவசியமற்றது என்று கூறியுள்ளார்.

“உண்மையில் கூற வேண்டுமெனில் நான் இது பற்றி அக்கறை கொள்ளவில்லை என்பதே. இவர்கள் நால்வரும் விளையாடுவதை பார்ப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இவர்களைத் தவிரவும் சில தற்கால வீரர்கள் இதே போன்ற கரியர் பாதையில் சென்று கொண்டிருக்கின்றனர்.

கோலியின் பக்கம் வயது இருக்கிறது. இதுவரை அவரது ஒருநாள் போட்டி கிரிக்கெட் வாழ்க்கை அபாரமாக உள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் அவர் என்ன செய்தார் (4 சதங்கள்) என்பதையும் நாங்கள் அறிவோம். அவர் நவீன திறமைகள் படைத்தவர், முக்கியமாக சிறந்து விளங்க வேண்டும் என்ற அவா மிக்கவர். தனது நாட்டு அணியை சிறந்த முறையில் வழிநடத்த வேண்டும் என்று விரும்புகிறார்.

ஸ்மித், வில்லியம்சனும் அதே நிலையில்தான் உள்ளனர். இவர்களில் யார் மைண்ட் கேமில் சிறந்து விளங்குகின்றனரோ அவர்கள் தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த சாதனைகளுடன் நிறைவுறுவர்” என்றார்.

சச்சின் - கோலி ஒப்பீடு பற்றி...

விராட் கோலி அவரது கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்கும் வரை காத்திருப்போம். விராட் இன்னமும் இளம் வீரர்தான். அவருக்கு நாளைக்கே மோசமான காயம் ஏற்பட்டு இன்னொரு போட்டியை ஆட முடியாது போனால்.. சச்சினுடன் ஒப்பிடுவது விரயம்தானே. சச்சின் 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடிவிட்டார். இந்நிலையில் விராட் கோலி 50 அல்லது 60 டெஸ்ட்கள்தான் ஆட முடிகிறது என்றால்.. எனவே ஒப்பீடு கிடையாது.

அனில் கும்ப்ளே பயிற்சியாளரானது பற்றி...

அனில் கும்ப்ளேயை பயிற்சியாளராக நியமித்தது இந்திய அணிக்கு மிகச்சிறந்ததாகும். அவர் கிரிக்கெட் ஆட்டத்தில் கட்டுறுதி மிக்க வீரர். ஒரு வீரராகவும் கேப்டனாகவும் சிறந்து விளங்கியவர். மும்பை இந்தியன்ஸில் அவருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது, அவர் கிரிக்கெட் பற்றி மிகப்பெரிய அளவில் விவரம் தெரிந்தவராக உள்ளார். ஆனால் அவர் எவ்வளவு சிறந்த பயிற்சியாளர் என்பதை வீரர்களே அறுதியிட வேண்டும். வெளியிலிருந்து நமக்கு ஒன்றும் தெரியாது.

இவ்வாறு கூறினார் ரிக்கி பாண்டிங்.

SCROLL FOR NEXT