விளையாட்டு

டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்று: நெதர்லாந்தை வென்றது ஜிம்பாப்வே

செய்திப்பிரிவு

இருபது ஓவர் உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஜிம்பாப்வே.

முந்தைய தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஜிம்பாப்வே, அயர்லாந்து அணியிடம் தோல்வியடைந்திருந்தது. இந்நிலையில் தனது 2-வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கான நம்பிக்கையை தக்கவைத்துக் கொண்டது. நெதர்லாந்து அணி தனது முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை வென்றுள்ளது.

நேற்று நடைபெற்ற ஜிம்பாப்வே – நெதர்லாந்து இடையிலான தகுதிச் சுற்று ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதர்லாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் ஸ்வார்ட் 3 ரன்னிலும், மைபர்க் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

நடுவரிசையில் கூப்பர் 58 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து அணியை தூக்கி நிறுத்தினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து 5 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது.

அடுத்து ஜிம்பாப்வே அணியில் மசகட்சா, சிக்கந்தர் ரஸா ஆகியோர் ஆட்டத்தைத் தொடங்கினர். ரஸா 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அடுத்து மசகட்சாவுடன் கேப்டன் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தனர்.

நிதானமாக விளையாடிய மசகட்சா 45 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சிகும்புரா ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த வில்லியம்ஸ் 19 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த டெய்லர் 39 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் ஜிப்பாவேயின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டன.

இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த ஓவரின் முதல் 4 பந்துகளில் 6 ரன்களை எடுத்த வில்லியம்ஸ் 5-வது பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டம் உச்சகட்ட பரபரப்பை எட்டியது. கடைசி பந்தில் 1 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், அப்பந்தை எதிர்கொண்ட சிபான்டா, சிக்ஸரை விளாசி அசத்தினர். இதனால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களை ஜிம்பாப்வே எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

SCROLL FOR NEXT