விளையாட்டு

ஆசிய கோப்பை: இந்தியாவுக்கு 280 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்கதேசம்

செய்திப்பிரிவு

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியாவுக்கு 280 ரன்களை வெற்றி இலக்காக வங்கதேச அணி நிர்ணயித்தது.

பதுல்லாவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட் செய்ய வங்கதேசத்தை அழைத்தது.

அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ஷம்சுர் ரஹ்மான் 7 ரன்களில் முகமது சமியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதேவேளையில், துவக்க ஆட்டக்காரர் அனுமல் ஹக் நிதானமாக பேட் செய்து 106 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்தார். மோமினுல் ஹக் 23 ரன்கள் எடுத்தார்.

பின்னர் களமிறங்கிய முஷ்ஃபிகர் ரஹீம் மிகச் சிறப்பாக பேட் செய்து சதமடித்து, அணியின் ரன் எண்ணிக்கையை வெகுவாக உயர்த்தினார். அவர் 113 பந்துகளில் 117 ரன்கள் குவித்து சமியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

நஹீம் இஸ்லாம் 14 ரன்களிலும், நாசர் ஹுசைன் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஜியாவுர் ரஹ்மான் 18 ரன்கள் சேர்த்தார். சோஹக் காஸி ஆட்டமிழக்காமல் 3 ரன்களையும், மோர்டசா ஒரு ரன்னையும் எடுத்தனர்.

வங்கதேச அணி தனது இன்னிங்ஸ்சில், 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் எடுத்தது.

இந்திய தரப்பில் முகமது சமி 4 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார், ஆரோன், அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ஆசிய பிராந்தியத்தில் வலுவான அணியாகத் திகழும் இந்திய அணியின் கேப்டன் தோனி காயம் காரணமாக விலகிவிட்டார். இதனால் புதிய கேப்டனான விராட் கோலியின் தலைமையில் இந்தியா களமிறங்கியுள்ளது.

ஆசிய கோப்பை போட்டியில் 5 முறை சாம்பியனான இந்திய அணி, சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூஸிலாந்து அணிகளிடம் தோல்வி கண்டது. அதனால் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆசிய கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்தியா.

SCROLL FOR NEXT