விளையாட்டு

ராஞ்சியில் சதம்: சாஹா மகிழ்ச்சி

செய்திப்பிரிவு

ராஞ்சி டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சாஹா கூறியுள்ளார்.

ராஞ்சி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக ஆடிய விக்கெட் கீப்பர் சாஹா, 116 ரன்களைக் குவித்தார். இதனால் இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையை எட்டியுள்ளது. இப்போட்டி குறித்து சாஹா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளில் எனது ஆட்டம் எனக்கு திருப்தியளிப்பதாக இருந்தது. அந்த 3 ஆட்டங்களில் இதுவும் ஒன்று. ராஞ்சி டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு ஒரு மிகச்சிறந்த பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது. அந்த பார்ட்னர்ஷிப்பை நானும் புஜாராவும் வழங்கியுள்ளோம் என்பது திருப்தியளிக்கிறது. இந்த போட்டிக்கு முன்னதாக இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் நானும் புஜாராவும் சேர்ந்து 316 ரன்களைக் குவித்தோம். அது இப்போட்டியில் எங்களுக்கு கைகொடுத்தது. முடிந்தவரை நிதானமாக ஆடி ரன்களைச் சேர்க்க நாங்கள் திட்டமிட்டிருந்தோம். நான் சிறப்பாக ஆட புஜாரா எனக்கு உதவியாக இருந்தார். அவர் எனக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசி உற்சாகமளித்தார். இந்திய அணி என் ஆட்டத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை என்னை பலப்படுத்தியுள்ளது.

இன்றைய தினம் பந்து வீசியதைப் போலவே கடைசி நாள் ஆட்டத்திலும் இந்திய வீரர்கள் சிறப்பாக பந்து வீசுவார்கள். ஆஸ்திரேலிய வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்து விக்கெட்களை வீழ்த்துவார்கள். இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது.

இவ்வாறு சாஹா கூறினார்.

SCROLL FOR NEXT