அடுத்த ஆண்டு பிரேசிலில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (ஃபிஃபா) சார்பில் வழங்கப்படவுள்ள உலகக் கோப்பை வரும் ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா வருகிறது.
இந்த உலகக் கோப்பை உலகம் முழுவதிலுமுள்ள பல்வேறு நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக இப்போது பூடான் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கிருந்து இன்று நேபாளம் செல்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து கொல்கத்தாவுக்கு கொண்டு வரப்படுகிறது.
6.175 கிலோ கிராம் எடை கொண்ட தங்கத்தால் ஆன இந்த உலகக் கோப்பை கால்பந்துக்கு பெயர்போன கொல்கத்தா ரசிகர்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது. இந்த உலகக் கோப்பை 88 நாடுகளுக்கு எடுத்து செல்லப்படுகிறது. 88 நாடுகளுக்கும் இந்த கோப்பை எடுத்துச் செல்லப்படும்போது 1 லட்சத்து 49 ஆயிரத்து 576 கி.மீ. பயணித்திருக்கும். 8 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்த கோப்பையை பார்த்திருப்பார்கள் என ஃபிஃபா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.