மீண்டும் வெற்றிகர பினிஷிங் வழிக்குத் திரும்பிய ஆட்ட நாயகன் தோனி அமைதி காப்பதே சிறந்த உத்தி என்ற தொனியில் ஆட்டம் முடிந்தவுடன் பரிசளிப்பு நிகழ்ச்சியில் கூறினார்.
ஸ்மித் ஆட்டமிழந்தவுடன் இன்று (சனிக்கிழமை) 4-ம் நிலையில் தோனி களமிறங்கிய போது புனேயின் ஸ்கோர் 11 ஓவர்கள் முடிவில் 87/2, 9 ஓவர்களில் வெற்றிக்கு 90 ரன்கள் தேவை. ஒரு கட்டத்தில் 6 ஒவர்களில் வெற்றிக்குத் தேவை 76 ரன்கள். அதாவது ஓவருக்கு 12.66 ரன்கள் தேவை. அப்போதுதான் கவுல் வீசிய ஒரு பந்தை தனது வழக்கமான மட்டை சுழற்றலில் லாங் ஆனில் சிக்ஸருக்குத் தூக்கினார் தோனி.
மீண்டும் சிராஜ் ஒரு அருமையான ஓவரை வீச 16-வது ஓவரில் 6 ரன்களே வர, தேவைப்படும் ரன் விகிதம் ஓவருக்கு 14 ரன்கள் என்று அதிகரித்தது. ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்க 17-வது ஓவர் முடிவில் தேவைப்படும் ரன் விகிதம் 15.66 என்று எகிறியது. அதன் பிறகுதான் தோனி வெளுத்து வாங்கி தனது வழக்கமான அதிரடி பினிஷிங்கில் வெற்றிக்கு இட்டுச் சென்று ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார். 34 பந்துகளில் 61 நாட் அவுட். உண்மையில் தோல்வி நோக்கிச் சென்று கொண்டிருந்த புனேயை வெற்றிக்கு இட்டுச் சென்றார் தோனி.
இதனையடுத்து நடந்த பரிசளிப்பு நிகழ்ச்சியில் ஆட்ட நாயகன் தோனி பேசியதாவது:
இது மிகவும் கடினமான ஒன்று. இன்னிங்ஸின் பின்னால் எங்களிடம் ஸ்ட்ரைக்கர்கள் இருந்ததால் ரஷீத் கான் ஓவர்களை முடிக்க வேண்டியிருந்தது என்பது முக்கியமானது.
மைதானத்தில் ஒரு புறத்தில் காற்றுக்கு வாகாக ஆட முடிந்தது. ஒரு புறம் காற்றுக்கு எதிராக அடிக்க வேண்டும். இது போன்ற ஆட்டங்களை நாம் எப்போதும் வென்று விட முடியாது.
எனவே மிக நன்றாக ஆடினோம் என்றே கருதுகிறேன். மனோஜ் திவாரி பங்களிப்பு செய்தார், அவரும் அதிகப் பந்துகளை சாப்பிடவில்லை. மிக அதிக ரன்விகிதம் என்ற ஒன்று இல்லை.
இத்தகைய சூழ்நிலைகளில் எதிரணி பவுலர்கள் எவ்வளவு நன்றாகத் தங்களது திட்டங்களை செயல்படுத்துகிறார்கள் என்பதே முக்கியம்.
எனவே ரன் விகிதம் 7, 8, 9, 10 என்று எகிறினால் கவலையில்லை.. அமைதியாக இருக்க வேண்டும் என்பதே மிக முக்கியம்.
இவ்வாறு கூறினார் தோனி.